Dec 07

பிரதமர் மீது கடும் விமர்சனம்: மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோர ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோர வேண்டும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஜஹாங்கீருக்கு பின் ஷாஜகான்தான் என்பது அனைவருக்கும் தெரியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியதை கிண்டல் செய்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதன் மூலம் அக்கட்சி வாரிசு அரசியலை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில் டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை இன்று (வியாழன்) திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி,  ''அம்பேத்கர் நாட்டிற்கு செய்த பெரும் சேவையை முன்பு இருந்த அரசு மறைத்து விட்டது'' எனக் குற்றம்சாட்டினார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ''பிரதமர் மோடி மிக மோசமான அரசியல் செய்கிறார் என பொருள்படும்படி வெறுக்கத்தக்க மனிதர்'' எனக்கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ட்விட்டரில் கூறுகையில், ''பிரதமர் மோடியும், பாஜகவினரும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை வேறுபட்ட கலாச்சாரம், மரபில் வந்துள்ளோம். மணிசங்கர் அய்யரின் கருத்தையும் நான் ஏற்கவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்பார் என நம்புகிறோம்'' எனக்கூறியுள்ளார்