Dec 07

பாலஸ்தீன் மீதான இந்தியாவின் பார்வையை மூன்றாம் நாடுகள் தீர்மானிக்க முடியாது: மத்திய அரசு

ஜெருசலேமை தனது தலைநகராக இஸ்ரேல் கருதி வருகிறது. ஆனால் இதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளின் தூதரகங்களும் டெல் அவிவ் நகரில்தான் உள்ளன. அதேசமயம் கிழக்கு ஜெருசலேம் நகரை தங்களது எதிர்கால தலைநகராக பாலஸ்தீனர்கள் உரிமை கோரி வருகின்றனர்.


இங்குதான் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் உள்ளன.அங்கு இஸ்ரேல், யூத குடியிருப்புகளை கட்டியுள்ளது. இது சர்வதேச சட்டப்படி குற்றம் என்ற கருத்து நிலவி வருகிறது. 1993-ம் ஆண்டு, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஜெருசலேமின் நிலை என்ன என்பது குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறது.


இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார், “பாலஸ்தீன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது மற்றும் நிலையானது. இது நமது பார்வை மற்றும் ஆர்வத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பார்வையை மூன்றாம் நபர்கள் தீர்மானிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.