Dec 05

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை: நீதிபதியின் விசேட கட்டளை

யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில், சந்தேகநபர்களது உடையில் காணப்பட்ட இரத்த மாதிரி மற்றும் சி.சி.ரி.வி. காணொளி என்பவற்றை பகுப்பாய்வு செய்வது தொடர்பில் விசேட கட்டளை பிறப்பிக்கப்படும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) ஊரகாவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மன்றில் ஆஜராகிய சந்தேகநபர்கள் சார்பு சட்டத்தரணி திருக்குமார், இவ்வழக்கில் சந்தேகநபர்களது உடையில் காணப்பட்ட இரத்த மாதிரி தொடர்பாக பகுப்பாய்வுக்காக அனுப்பட்ட அறிக்கை இன்னமும் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், மருதனார்மடம் பகுதியில் எடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காணொளி பகுப்பாய்வுக்கு அனுப்புவதில் பொலிஸார் அசட்டையீனமாக செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி, ரத்த பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் சி.சி.ரி.வி. காணொளி தொடர்பாகவும் வழக்கின் அடுத்த தவணையின்போது விசேட கட்டளையொன்றை பிறப்பிப்பதாக குறிப்பிட்டதுடன், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.