May 08

தமிழ் மக்கள் தங்களை நம்பவேண்டும் என்கிறார் சிறிகாந்தா

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவதா தடை சட்டம் பழைய குருடி கதவை திறவடி என்ற சிந்தனையில் தான் சிங்கள பெரும்பான்மையினரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன  என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் நாயகமும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு அவர் கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை கோகிலா வீதி தோட்டவெளியில்  சனிக்கிழமைபத்து ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் நிதிச்செயலாளருமான கே. என். விந்தன் கனகரத்தினத்தின் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் நினைவு பேருரை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவோடும் அங்கீகாரத்தோடும், ஆமோதிப்போடும் அனுசரணையோடும் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு கொண்டு வருகின்றது. இந்த ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டும். ஒற்றுமையை உதட்டளவிலே கட்டிக்காப்பதில் அர்த்தமில்லை. ஒற்றுமை என்பது செயற்பாடுகளிலே வெளிப்பட வேண்டும். ஐந்து விரல்களும் இணைந்திருந்தால் தான் எதிரியை தாக்க முடியும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் நான்கு விரல்கள் ஒன்று சேர்ந்துள்ளன. ஐந்தாவது விரல் தனித்து வெளியே நிற்கின்றது. அந்த ஐந்தாவது விரலும் கூட்டமைப்பிற்குள் வந்தால் கூட்டமைப்பு மேலும் பலம் பெறும்.

 

எவ்வாறு கௌரவர்களை குருசேத்திர களத்தில் பாண்டவர்கள் ஒன்று சேர்ந்திருந்து எதிர்த்தார்களோ அதே போன்று நாமும் எதிர்க்க வேண்டும். ஆயுத போராட்ட இயக்கங்கள் என்றால் தகாதவர்கள் சமூக விரோதிகள் என்ற எண்ணம் இருக்கின்றது. அது தவறானது துஷ்ட தனமானது. எமது போராட்டத்தின் பின்னர் எமக்கு மிஞ்சியுள்ளது மாகாண சபை அமைப்பு முறைமை தான். இதனை வென்றேடுத்தவர்கள் அந்நாள் ஆயுத போராட்ட இயக்கங்களே என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. இன்று எமக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். 2005 இல் தனிப்பட்ட காரணங்களுக்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைந்த அரசியல் துறைப் பொறுப்பாளர் பரராஜசிங்கத்தை சந்தித்த போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எங்களுடைய கருத்துக்களை தலைவரிடம் சொல்வதாக கேட்டிருந்தார்.

 

தேர்தலில் யார் வரவேண்டும் என்பதல்ல பிரச்சனை யார் வரக்கூடாது என்பது தான் பிரச்சனை. மஹிந்த வந்தால் என்னவெல்லாம் நடக்க கூடாதோ அத்தகையவை எல்லாம் நடக்கும் என தலைவரிடம் கூறுங்கள் என நான் கூறினேன். விவேகமான முடிவுகள் என நாம் எடுத்த முடிவுகள் விபரீதங்களுக்கு இட்டு சென்றன. இதனை நான் குறையாக கூறவில்லை. இவற்றிலிருந்து நாங்கள் பாடங்களை கற்க வேண்டும். இன்று நிலைமை என்ன?  மகிந்தவின் மேதினத்திற்கு சனம் திரண்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்கும், எனவே அரசியல் தீர்வுக்கு இது பின்னடைவாக அமையும் என ஒரு கருத்து எங்களுடைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து வந்துள்ளது. கூட்டங்களுக்கு ஆட் சேர்ப்பது கலை, மகிந்தவின் கூட்டம் எவ்வாறு சேர்க்கப்பட்டிருக்கும் என்று எங்களில் பலருக்கு அனுபவம் ரீதியாக தெரியும்.

 

பெரும் திரளாக சனத்தை கூட்டியவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற பொய்யான கருத்தை வரலாறு ரீதியாக எம்மால் அறிந்து கொள்ள முடியும். இதனை காரணம் காட்டி எமது அரசியல் தீர்வு பாதிக்குமா? இதனை ஒரு அழுத்தமாக அரசாங்கம் காட்டி தனது சொந்த இலாபங்களுக்காக தீர்வு முயற்சியை தாமதிக்க வைக்குமா? என்று சிந்திக்க விரும்புகின்றோம். ஜனாதிபதி நல்லவர், நேர்மையானவர்.  ஆனால் சமநிலை பேணுகின்ற அரசியல் நிர்ப்பந்தத்தில் அவர் இருந்து கொண்டுள்ளார். குறிப்பாக போர்க்குற்ற விசாரணை தொடர்பில் என்ன கூறி வருகின்றார் என்று தெரியும், யுத்த வீரர்களை வெளிநாட்டு அழுத்தத்துக்கு பணிந்து சர்வதேச நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்த மாட்டேன் என திட்டவட்டமாக கூறி வந்திருக்கின்றார்.

 

காணி விடுவிப்பு விவகாரத்தில் எமது கூட்டமைப்பின் தலைவரே இராணுவத்தினை சந்தித்து பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் எமது தலைவருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. அடிப்படை பிரச்சனைகளில் கடந்த நான்கு மாதங்களில் எந்த மாற்றங்களையும் காணவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் விடயத்தில், பலர் வெளிநாடு சென்றிருக்கலாம் என வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று பிரதமர்  ரணில் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெவர்த்தனவின் சிந்தனையில் தான் தற்போதும் ஐக்கிய தேசிய கட்சி சென்றுகொண்டிருக்கின்றது. ஒற்றையாட்சியை விடாமல் பற்றி பிடிப்பதற்கும், பௌத்தத்திற்கு முன்னுரிமை வாங்குவதையும் தான் அந்த கட்சி விரும்புகின்றது.

 

வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த நிலைமையில் தான் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். நாங்கள் கனவுலகத்தில் சஞ்சரிப்பதில் பிரயோசனம் இல்லை. மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், மலையக தமிழ் மக்கள், முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து புதிய ஜனாதிபதியை கொண்டுவந்திருந்தோம், கிட்டத்தட்ட 55 வீதமான சிங்கள மக்களுடைய வாக்குகள் மஹிந்த ராஜபக்சவுக்கு தான் கிடைத்திருந்தன. தமிழர் வாக்குகளால் தான் சிறிசேன ஜனாதிபதியாகயிருந்தார். இந்த பின்னணியின் தான் சில விடயங்களை நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

 

ஜே.வி.பி. தமிழ் மக்கள் தொடர்பான கோரிக்கையில் தீவிரமான ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றதை காண முடிகின்றது. இவ்வாறு ஒவ்வொரு அரசாங்கங்கள் மீதும்  நம்பிக்கை வைத்திருப்பதில் எந்த பிரயோசனும் இல்லை. முள்ளிவாய்க்கால் கொள்ளி வைப்பிற்கு மஹிந்தவோடு கைகோர்த்த முன்னாள் இராணுவ தளபதி அமைச்சராக இருக்கும்பொழுதே பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் அளவிற்கு ஜனநாயக விரோத சிந்தனைகள் இந்த நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு புறத்தில் தம்பி சுமந்திரன், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த நான்கு விடயங்களில் மூன்று விடயங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டயுள்ளார். முதலாவதாக பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கணம் சர்வதேச ரீதியில் அமைந்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளிநாடுகளில் பயங்கரவாதம் என்பது வேறாகவும் இலங்கையில் பயங்கரவாதம் என்பது வேறாக இருக்கும்.

 

இரண்டாவாதாக சட்டத்தரணிகள் கைதானவரை சந்திப்பது தொடர்பான அடிப்படை உரிமை கோரிக்கை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மூன்றாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயங்கரமாக இருக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறுதல். இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சித்திரவதைகளின் மூலம் பெறப்படுகின்ற போதிலும், இவை சுதந்திரமாக வழங்கபட்டது என நீதிமன்றத்தில் நிரூபிக்கபட்டால் அதனை வைத்தே சிறைக்கு அனுப்ப முடியும். இதற்கு புதிதாக வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வழியேற்படுத்தி கொடுத்துள்ளது. சிறைகளில் அடைபட்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கோரிக்கை இதன் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒரு பலமான ஆயுதமாக, வழக்கு தொடுநரின் அடிப்படை ஆதாரமாந நீடிப்பதற்கு இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வழியேற்படுத்தி கொடுத்துள்ளது.

 

பழைய குருடி கதவை திறடி என்ற சிந்தனையில் தான் சிங்கள பெரும்பான்மையினரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன என்பதனை நாங்கள் தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் நம்பி ஏமாந்த வராலாறுகள் பல உள்ளன. இந்த நிலையில் தான் தமிழீழ விடுதலை இயக்கம் ஒன்றை அழுத்தி கூற விரும்புகின்றது. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். பலஸ்தீனியர்கள் எவ்வாறு தங்களை வருத்தி போராடி கொண்டுள்ளார்களோ, அதே போன்று நாங்களும் போராட வேண்டும். அரசியல் இராஜதந்திர விடயங்களில் தமிழர் தரப்பு ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு அரைகுறை அரசியல் தீர்வு திட்டமும் தமிழ் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

 

ஒற்றையாட்சி என்பது இலங்கை அரசியலமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, எமது மரபுவழி தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப் பங்கீட்டிலே ஒரு தனி அலகாக அங்கீகரிக்கப்பட்டு, எங்களுக்கு திருப்திகரமான நீதியான சுயாட்சி வேண்டும். அத்தகைய ஒரு தீர்வு திட்டம் சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை என்றால், நாங்கள் பல முடிவுகளை எடுக்க நேரிடும், 70 வீதமான நிலப்பரப்பை கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் யூதர்களின் இஸ்ரேலியர்களின் குடியேற்றங்களால் தற்போது 17 வீதமான நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்ட போதிலும் தமது போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.

 

ஆகவே தான் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழீழ விடுதலைக்காக எமது மக்களுடைய விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முதலாவது இயக்கம் என்ற வகையிலே, அரசியலுக்குள் அங்கம் வகிக்கும் ஜனநாய இயக்கம் என்ற வகையிலே ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகின்றது. நாங்கள் எங்கள் மக்களை நம்புகின்றோம். தங்கள் பிரச்சனைகளை தமிழ் மக்கள் தமது கைகளிலே எடுத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு யாரும் உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். இந்த யுத்தத்திற்கு தாங்கள் கேட்காமலே இந்தியா தமக்கு உதவியது என மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். ஆனால் இந்தியாவில் இன்று நிலைமை என்ன? தமிழ் நாட்டில் ஹிந்தி திணிக்கப்படுகின்றது.

 

இன்று எங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையிலே போர்க்குற்றம் தொடர்பில் பெரிதாக பேசும் பல நாடுகள் நடந்து முடிந்த யுத்தத்தில் நான்கு இலட்சம் மக்கள் யுத்த பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டு உயிராபத்தை எதிர்நோக்கிய போதும் கூட, அன்றைய மஹிந்த அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியாக உதவின   என்பதை நாங்கள் ஒருபோதும் மறந்துவிட கூடாது. தங்கள் சொந்த காரணங்களுக்காக அவர்கள் குரல் எழுப்பி கொண்டுள்ளார்கள். நாங்களும் அதனை பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றோம். ஆகவே உணமையான நிலவரத்தை அறிந்து எமது ஒற்றுமையை பலப்படுத்தி ஒரு நீதியான தீர்வு கிடப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை நோக்கி விவேகமாகவும், துணிவேடும் பயணிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். மைத்திரியை கொண்டுவந்தோம், அவர் அது செய்ய வேண்டும், இது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது எல்லாம் சிறுபிள்ளை தனமானது.

 

கடந்த கால வரலாறுகளை எடுத்து பார்த்தால் ஆட்சிக்கு வருவதற்கு தமிழ் மக்களுடைய வாக்குகள் தேவைப்படும். ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிராகரித்து நடுக்கடலில் தத்தளிக்க விட்டுவிடுவார்கள். ஆகவே தான் அவர்களை நம்ப வேண்டிய தேவை எமக்கு இல்லை. தமிழ் மக்கள் தங்களை நம்ப வேண்டும். பாலஸ்தீனம், கிழக்கு தீமோர், எரித்திரிய மக்களை போன்று நாங்கள் உறுதியாக இருந்தால் எங்கள் தலைவிதியை எங்களால் எழுத முடியும். நாம் கோருகின்ற தீர்வு கிடைக்காவிட்டால் எங்கள் தெரிவு என்ன என்பதனை நாங்கள் தீர்மானிப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றை கோர முடியும். அதனை முன்வைத்து எமது போராட்டத்தை நகர்த்த முடியும். யார் தடம் புரண்டாலும் எமது இளைய தலைமுறை அந்த இலட்சிய பாதை நோக்கி உறுதியாக செல்லும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.  நாங்கள் எங்கள் தலைவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்றார்.