May 07

பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு! சிறீதரன் எம்பி.

பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் பனை, தென்னை வளத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கான நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் பனை தென்னை வளத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் அரச வரிக் கட்டுப்பாடுகள் ஏனைய பல இடர்பாடுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனைச் சந்தித்து முறையிட்டிருந்தனர். 

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை வரணி வடக்கு பனை வள உற்பத்தி நிலையத்திற்கு அழைத்து அங்கு வைத்து தாம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்திருந்தனர்.

நேற்றைய தினம் (06.05.2017) மதியம் 2.00 மணியளவில் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க தென்மராட்சி கொத்தணித் தலைவர் க.துரைசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவயோகன் ஆகியோருடன் யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க தென்மராட்சி கொத்தணி பொதுமுகாமையாளர் க.அருட்செல்வம் மற்றும் வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளின் பொது முகாமையாளர்கள், சங்க, கொத்தணி தலைவர்கள், பொதுமுகாமையாளர்கள் என பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அவர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பனை தென்னை வளத்தை நம்பி தமது வாழ்வாதாரமாகக் கொண்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது தொடர்பில் நாம் பல தடவைகள் பாராளுமன்றத்திலும் உரிய தரப்பினரிடத்திலும் எடுத்துரைத்துள்ளோம்.

கடந்த காலங்களின் அரசினது அமைச்சுப் பதவியில் இருந்த டக்ளஸ் உட்பட்ட அவரது கூட்டாளிகள் பனை தென்னை வளத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட தொழிலாளர்களது பெருமளவு நிதியைக் கையாடல் செய்துள்ளார்கள். திக்கம் வடிசாலையில் இடம்பெற்ற மோசடிகளால் அங்கு பணி புரிந்த, அத்தொழிற்சாலையை மையமாகக் கொண்டு தொழில் செய்த பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இனியும் உங்களது நிதியை யாரையும் நம்பி அவர்களது பொறுப்பில் ஒப்படைத்து ஏமாறாதீர்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல அரசினது அதிகரித்த வரிகளால் பனை தென்னை வளத்தை நம்பித் தொழில் செய்து வரும் உள்ளூர் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். நீங்கள் கோரும் வரிச்சலுகை நியாயமானது இது குறித்து நான் பாராளுமன்றத்தில் உரிய பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

உள்ளூர் உற்பத்திகளுக்கான வரி விதிப்புக்கான அதிகாரத்தை வடக்கு மாகாண சபையிடம் மத்திய அரசு வழங்குமாகவிருந்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத முறையில் நியாயமான வரி விதிப்புக்களை, வரிச் சலுகைகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளைப் பின்பற்ற முடியும்.

எமது பகுதி வளங்களைப் பயன்படுத்துவதற்கான, எமது பகுதியில் தொழில் செய்யும் உள்ளூர் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் வடகிழக்கிணைந்த எமது தமிழர் தாயகப் பகுதி அதிகாரங்கள் அனைத்தையும் எம்மிடமே தருமாறு நாம் கோரி நிற்கின்றோம். என்றார்.