Dec 01

கனடாவில் ஈழத்தமிழருக்கு காத்திருந்த ஏமாற்றம்?? தொடரும் துயரம்…

ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதன் முறை பிரதம மந்திரியாக பதவியேற்று, ஒரு சமூதாயத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தில் தன்னால் ஆன, உறுதியான முயற்சிகளை எடுப்பதாக கூறினார் என்றால் அதை வெறும் அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.

பிரதமர் ஜஸ்டின் Trudeau கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ‘தமிழ் தெரு விழாவில் முழங்கிய பேச்செல்லாம் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலவே தோன்றுகிறது.

தேர்தலுக்கு முன்பாக தமிழ் சமூதாயத்திற்குக்கான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதாகவும், உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் நடந்த போர் குற்றங்களின் மேல் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும், நீதி மற்றும் சமரசத்தை காக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கினார். இப்பொழுது கேட்டாலும் நம்பிக்கை தரும் வகையில் வாக்குறுதிகளை தருவார். ஆனால், இதுவரை தமிழர் விவகாரத்தில் எந்த வித பாரிய நகர்வையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அன்று தொட்டு இன்று வரை தமிழர்களுக்கு வாக்குறுதிகளை மட்டும் வழங்கும் லிபெரல் கட்சி, தமிழர்கள் மேல் ஒரு அபார நம்பிக்கை வைத்திருக்கிறது.

அதாவது, எது எப்படி இருந்தாலும் தமிழர்கள் வாக்குகள் லிபெரல் கட்சிக்குத்தான் என்ற ஒரு திடமான நம்பிக்கை.

இலங்கையை விட்டு வெளியேறிய பெரும்பாலான தமிழ் மக்கள் கனடாவில் குடியேறி இந்நாட்டை தங்கள் இரண்டாம் தாயகமாக கருதத் தொடங்கிவிட்டனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கிருக்கும் தமிழர்கள் அரசியல் உள்பட தடம் பதிக்காத களமே இல்லை என உறுதியாகக் கூறலாம்.

இன்று கனடாவில் உள்ள இதர மக்கள் போலவே தமிழர்களும் அதன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் உறுதுணையாக இருக்கின்றனர்.

அவர்கள் தாயகத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் இன்னமும் அவர்களின் கடந்த கால துயரங்களையும் அங்கு நடந்த தொடர் நிகழ்வுகளையும் மறக்க வில்லை.

இன்றளவும் அவர்கள் நீதிக்காக ஏங்குகின்றனர். அப்பாவியான குற்றமற்ற ஆண், பெண் மற்றும் குழந்தைகள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்னும் பெயரிலே கொல்லப்பட்டதை எதிர்த்து நீதிக்காக காத்துஇருக்கின்றனர்.

இன்னும் காணாமல் போன ஏரளாமான ஆண், பெண், குழந்தைகளை அல்லது இலங்கை தேசியப் படையினரின் உதவியோடு அல்லது அவர்களாலேயே கடத்தி மற்றும் கற்பழிக்கப்பட்ட பலரை பற்றியும் அறிய காத்திருக்கின்றனர்.

ஆறாத வடுவோடு காத்திருக்கும் தமிழர்களை ஏளனம் செய்தது போல இந்த லிபெரல் அரசாங்கம் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் உட்பட்ட குழு ஒன்றை கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்க அனுமதி வழங்கி உள்ளது.

இவ்வாண்டில் நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் கனடா நாட்டின் “வான்கூவரில்” நடந்த ஐ.நா சபைக்கான அமைதி காக்கும் அமைச்சக மாநாட்டில், 2009ஆம் ஆண்டு போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புடன் கலந்து கொண்டனர்.

கனடாவில் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியான கன்செர்வேட்டிவ் கட்சி போர்க்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தை கனடாவுக்குள் அனுமதித்ததை பற்றி ஒரு முறையல்ல நான்கு முறை குரல் உயர்த்தியது.

ஆனால், அவர்களின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியான லிபரல் கட்சியிடம் விடை ஏதுமில்லை.

இவ்வரசாங்கத்தை நடத்தும் லிபரல் கட்சியினருக்கு இலங்கை விவகாரங்கள் பற்றி அக்கறை ஏதும் உள்ளதாக தெரியவில்லை. ஸ்டீபன்கார்பரின் தலைமையில் முன்பு இயங்கிய அரசு, இலங்கை விவகாரங்கள் பற்றிய நடவடிக்கைகளில் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் இயங்கியது.

அப்போதிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பெயர்டு இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அனைத்து சூழ்நிலைகளையும் தெளிவாக கையாண்டார்.

கார்பர் அரசாங்கம் தமிழ் மக்களிடம்,

“ நாங்கள் இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்போம்”, என்று தேர்தல் கால வாக்குறுதி எதுவும் தரவில்லை. ஆனால் அவ்வாறு செயலாற்ற துணிந்தது. தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக உலக மேடையில் உரக்க பேசியது. இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுத்தது.

போர் குற்றங்களோ மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களோ இழைத்தவர்களையும் இழைத்ததாக சந்தேகிக்கப்படுபவர்களையும் கனடாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முடியும் என்ற ஒரு சட்ட மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்ற பட்டு அமுலில் இருக்கிறது.

மக்னிட்ஸ்கீ ஆக்ட் எனப்படும் இந்த சட்டத்தை உபயோகித்து வரவிருந்த இலங்கை அதிகாரிகளை நிறுத்துமாறு கன்சர்வேட்டிவ் கட்சியின்

வெளியுறவுத்துறைக்கான இணை விமர்சகர் கார்நெட் ஜெனுஸ் பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தபோதும், லிபெரல் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை.

கர்னேட் ஜெநஸ் கூறிய ஒரு விடையம் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் கொண்ட குழு கனடா வருவதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை ஒன்றை Scarborough Rouge-Park தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், தமிழர், கேரி ஆனந்தசங்கரி டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.

தங்களுடைய லிபெரல் அரசில் இருக்க கூடிய ஒரே தமிழர், சட்ட வல்லுநர், கேரியின் கோரிக்கையை கூட ஏற்றுக்கொள்ளவில்லை இந்த அரசு என்று கார்னெட் தனது பாராளுமன்ற விவாதத்தின் பொது குறிப்பிட்டிருந்தார்.

காரணம்? லிபெரல் அரசிடம் தமிழர் பிரச்னை சார்ந்த எந்த ஒரு செயல் திட்டமும் இல்லை. அக்கறையும் இல்லை. தமிழரை விடுங்கள்… மனித உரிமை என்பது கூட பேச்சளவில் உபயோகித்தும் ஒரு அரசியல் சாதனம் போலவே இந்த அரசுக்கு தென்படுகின்றது..

இணைக்கப் பட்டிருக்கும் காணொளியிலே எதிர் கட்சியான கான்செர்வ்டிவ்சின் துணைடி நிழல் அமைச்சர் கர்னேட்ட் ஜெநஸ் எழுப்பும் கேள்விகளுக்கு கனடிய அரசாங்கத்தின் வெளிவிகார அமைச்சரின் பாராளுமன்ற செயலர் தரும் பதில்களை கேளுங்கள்.

இந்த விவாதம் இறுதியாக நடைபெற்றது.இதற்கு முன்னர் பல தடவைகள் இதே விடையம் சம்மந்தமான கேள்விகள் பலமுறை எழுப்ப பட்டன. இருப்பினும், விடைகள் இவ்வாறே இருக்கின்றன என்றல், அதன் அர்த்தம் என்ன என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.