May 05

பாடசாலை மைதான புனரமைப்புக்கு ரூபா 5 இலட்சம் ஒதுக்கீடு

மன்னார் பாலையடிப்புதுக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மைதான புனரமைப்புக்கு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் 5 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 பாடசாலையின் புதிய கட்டிட திறப்புவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்த சந்தர்ப்பத்தில் பாடசாலையின் மைதான பிரச்சனை சம்மந்தமாக பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அதற்க்கான உதவியும் கோரப்பட்டிருந்தது.


மைதானத்தினை நேரில் பார்வையிட்ட அமைச்சர் அதன் நிலையினையும் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இவ்வொதுக்கீடினை மேற்கொண்டுள்ளார்.


புதிதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களுடன் இன்றைய தினம் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மைதான புனரமைப்பு சமந்தமாக பழைய மாணவர்கள், பெற்றோர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் போன்றவர்களோடு ஆலோசனை நடத்தினார்.


அங்கு கருத்துரைத்த அமைச்சர் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினில் சிறந்த பலனை பெறவேண்டுமானால் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும், ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பினை செய்யும்போது, குறிப்பாக சிரமதானம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் மனித நேரங்களினை மைதான புனரமைப்பில் செலவழிப்பார்களானால் முடியும்.


அதனை ஒழுங்கமைக்கும் பணியினை பழையமாணவர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்ததோடு, அக்கிரமத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டது.