May 05

கனடாவில் சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை

கனடா கூட்டரசாக ஆனதன் பின்னர் முதன் முறையாக சிறுவர்களின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் 2016ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத் தகவலை அண்மையில்  வெளியிட்டுள்ள நிலையில், இவ்வாறு சிறுவர்களின் எண்ணிக்கையை விட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான கணிப்பீட்டில் கனடாவில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை 5.8 மில்லியன்களாக காணப்படும் நிலையில், முதியவர்களின் எண்ணிக்கை 5.9 மில்லியன்களாக காணப்படுகிறது.

இந்த 5.9மில்லியன் முதியவர்களுள் 19.4 சதவீதத்தினர் 85 வயதுக்கும் அதிகமானவர்கள் என்பதுடன், அவர்களில் 41.3 சதவீதத்தினர் 100 வயதுக்கும் அதிகமானவர்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய பழமைவாத அரசு கனேடியர்களின் ஒய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக்குவதற்குத் திட்டமிட்டிருந்தது. ஆயினும் லிபரல் அரசு 2016 ஆம் ஆண்டில் அதை மீண்டும் 65 ஆக ஆக்கியது.  லிபரல் அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு கனேடியர்களின் ஒய்வு பெறும் வயதையும், முதியோருக்கான கொடுப்பனவைப் (Old Age Security-OAS) பெறும் வயதையும் 67 ஆக அதிகரிக்க வேன்டும் எனப் பரிந்துரைத்துள்ள போதும், அரசு அவ்வாறு செய்யப் போவதில்லை என சமூக அபிவிருத்தி அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.

ஆயினும் 65 வயதின் பின்னரும் வேலை செய்யவிரும்புவோர் அவ்வாறு செய்யத் தடை இல்லை எனவும், அவ்வாறு செய்வொருக்கு அதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.