Mar 06

மும்பைத் தாக்குதலை நடத்தியது பாக் பயங்கரவாத அமைப்பே: ஒப்புக்கொள்கிறார் பாதுகாப்பு ஆலோசகர்

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியதாக அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மஹ்மூத் அலி துர்ரானி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, புதுல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 19-ஆவது ஆசியப் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

"பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்திய தாக்குதல், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனினும், இந்தத் தாக்குலுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அரசுக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத சக்திகள், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன. பாகிஸ்தானில் நிலவி வரும் வறுமை, படிப்பறிவின்மை, சிக்கல் நிறைந்த சட்ட அமைப்பு, பலவீனமான காவல்துறை போன்ற காரணங்களால் அங்கு பயங்கரவாதம் செழிப்பாக வளர்ந்து வருகிறது.

பயங்கரவாத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு, நாடுகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும், நம்பிக்கையின்மையும் மிகப் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின்றன. மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீத், பாகிஸ்தானுக்குத் தேவைப்படாதவராக இருந்தால், அவருக்கு எதிராக எப்போதோ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அது கண்டனத்துக்குரியது; உடனடியாக தடுக்கப்பட வேண்டியது ஆகும். உலகின் எந்தவொரு நாடும், பிற நாடுகளில் பயங்கரவாதத்தைப் பரப்ப தங்கள் நாட்டின் பகுதிகள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

எதிர்பாராத வகையில் வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தி, பொதுமக்களின் மனதில் பயத்தை விதைப்பதும், சட்ட விரோதமான சக்தியைக் கொண்டு, அரசை மிரட்டிப் பணிய வைப்பதுமே அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் சித்தாந்தமாக உள்ளது என்றார் அவர்.

பாகிஸ்தானிலிருந்து கடல்வழியாக கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை வந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ரயில் நிலையம், பாரம்பரியம் மிக்க தாஜ் ஹோட்டல், ஓபராய் டிரிடெண்ட் ஹோட்டல், யூதர்களின் மையம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 18 பாதுகாப்புப் படையினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்குப் பின் 2012-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய இந்தியா அவருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்தாலும், அவரை அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்தது. இந்தச் சூழலில், ஹஃபீஸ் சயீதை ’பயங்கரவாதி' என்று கடந்த மாதம் அறிவித்த பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.