Nov 24

யாழ்ப்பாணத்தில் கைதான ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.உத்தியோகப்பூர்வ வாகனத்தில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளுமிடத்து சந்தேகநபர் தப்பிச் செல்வார் என்பதால் வேனில் சென்று சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சந்தேகநபரின் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் வாளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

16 வயதான குறித்த சந்தேகநபர் கடந்த ஒரு மாதமாக பாடசாலை செல்லாது யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சந்தேகநபர்களில் சிலர் வெளிமாவட்டங்களுக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.