May 05

இரணைதீவில் குடியேற 336 குடும்பங்கள் காத்திருப்பு

கிளிநொச்சி பூனகரி இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் அங்கு தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் நடைபெற்று ஏழு ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத மக்கள் தொடர்ந்தும் தமது கோரிக்கைகளை முன் வைத்து வருவதுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1992ம் ஆண்டு இலங்கையின் வடக்கில் உள்ள தீவுகளில் ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக தீவக மக்கள் முழுமையாக தமது வாழ்விடங்களை விட்டு முற்றாக இடம்பெயர்ந்தனர். பின்னர் ஏற்பட்ட சுமூகமான சூழலையடுத்து யாழ் மாவட்டத்தின் உள்ள தீவுகளில் மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வாழ்வாதாரத்திற்கும் தொழில்களை செய்வதற்குமான சூழல்கள் ஏற்பட்டன.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்கு அல்லது தொழில் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் முழங்காவில் இரணைமாதா நகர் கடற்கரைப்பகுதியில் கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்