Nov 23

வவுனியா கணேசபுரத்தில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஊர்வலம்

வவுனியா கணேசபுரத்தில் அண்மையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த பகுதியில் இடம்பெற்று வரும் இளைஞர்களின் அட்டகாசத்தை தடுக்கக் கோரியும் கண்டன ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை வவுனியா, கணேசபுரம் ஆலயம் முன்பாக ஆரம்பித்த ஊர்வலம் குழுமாட்டு சந்தி வீதி வழியாகச் சென்று நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது.

கடந்த 14 ஆம் திகதி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டிருந்தார். இவ் விடயம் தொடர்பாக 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் குறித்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இச்சம்பவத்தை கண்டித்தும், அப்பகுதியில் உள்ள வெற்றுக் காணிகள், வீதிகளில் போதையில் கூடும் இளைஞர்களின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்தக் கோரியும் கண்டன ஊர்வலம் இடம்பெற்றது.

கணேசபுரம் கிராம மக்கள், அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். ஊர்வலமாக சென்ற மக்களை வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.குமாரசிங்க அம் மக்களை சந்தித்து கலந்துரையாடி இருந்ததுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி பெற்று தரப்படும் எனவும், அப்பகுதியில் இளைஞர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ஊர்வலமாக சென்ற மக்கள் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து இருந்தனர்.