May 04

ஐ.பி.எல்.திருவிழா ரோஹித்தின் நிதானத்தால் வென்றது மும்பை

ஐ.பி.எல்.தொடரின் 38ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களுர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைச் சேர்த்தது.

அவ்வணிக்கு டிவில்லியர்ஸ் 43ஓட்டங்களையும் நிகி 35ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். 

பின்னர் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

முதல் ஓவரை சவுதரி வீசினார். முதல் பந்திலேயே பார்தீவ் பட்டேல் ஓட்டமெடுக்காது ஆட்டம் இழந்தார்.

அடுத்து பட்லர் உடன் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 61 ஓட்டங்களைச்; சேர்த்தது. பட்லர் (33);, ராணா (27) பொல்லார்டு (17) கரண் சர்மா (09) வெளியேறினார்கள்.

குருணால் பாண்டியா 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார்.

மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 18 ஓட்டங்கள்; தேவைப்பட்டன. 

19ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் ரோகித் சர்மா சிக்ஸ் விளாசினார். இதனால் கடைசி ஒவரில் 7 ஓட்டங்கள்; மட்டுமே தேவைப்பட்டன. 

முதல் நான்கு பந்திலும் தலா ஒரு ஓட்டம் வீதம் அடிக்க, ஐந்தாவது பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.