Nov 21

பேரில்லாவெளி கிராமிய சுகாதார நிலையம் பற்றைக் காடாக காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி கிராமத்தில் உள்ள கிராமிய சுகாதார நிலையம் பற்றைக் காடாகவே காட்சியளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமிய சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு வைத்தியர்   மாதம் ஒரு முறை வருகை தந்து சிகிச்சை வழங்கியதாகவும், தற்போது வைத்தியர் யாரும் வருவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியர்கள் வருகை தராமை காரணமாக மக்கள் சந்திவெளி வைத்தியசாலைக்கு பல தூரம் சென்று வைத்திய நடவடிக்கைகளை பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிராமிய சுகாதார நிலையம் பற்றைக் காடாக காணப்படுவதால் இதன் ஊடாக டெங்கு நோய் மற்றும் விசங்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதன் காரணமாக இக்கிராம மக்கள் வைத்திய நடவடிக்கைகளை பெறுவதில் பாரிய சிக்கல் உருவாகின்றது. 

பேரில்லாவெளி கிராமத்திலுள்ள மக்கள் வைத்திய சிகிச்சைக்காக சந்திவெளி வைத்தியசாலைக்கு செல்வதாயின் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதன் பிற்பாடே செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

ஆனால் கிராமிய சுகாதார நிலையத்தை ஒழுங்கான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் கிராம மக்களின் நோயின் தாக்கம் அதிகரிப்பதை குறைக்க முடியும்.

இவ்விடயம் தொடர்பில் கிரான் பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். 

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாத்திரம் வைத்திய வசதிகள் தொடர்பாக கருத்துக்களை வழங்காமல் செயலளவில் இம்மக்களின் வைத்திய நடவடிக்கைக்கு உரிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும். 

நாட்டில் ஏற்பட்டு வரும் டெங்கு நோய் மற்றும் தொற்றாய் நோய்களில் இருந்து பேரில்லாவெளி கிராம மக்களை காப்பாற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என மக்கள் வேண்டுகின்றனர்.