May 04

முள்ளிக்குளம் மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்குங்கள்; டெனீஸ்வரன்

முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த 11வருடங்களாக  கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தற்போது  விடுவிக்கப்பட்ட குறித்த சில பகுதிகளுக்குள் மக்கள் குடியேறுவதற்று  கடற்படையினர் அனுமதியளித்துள்ளனர்.'


அப் பிரதேசத்துக்குள் உத்தியோகபூர்வமாக மக்கள் செல்வதற்கான அனுமதி கடந்த 30/04/2017  ஞாயிற்று கிழமைமக்களுக்கு வழங்கப்பட்டது. முள்ளிக்குளம் கிராமத்து மக்கள் விடுவிக்கப்பட்ட தங்கள் சொந்த நிலத்துக்கு செல்வதற்கு முன் தங்களது கிராமத்தின் பாதுகாவலியான பரலோக மாதாவில் ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.


இத் திருப்பலியினை அருட் தந்தையர்களான மாக்கஸ், தவராஜா,ரெவல் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

மேலும் இந் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் கௌரவ.செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாணசபை போக்குவரத்து அமைச்சர்  கௌரவ பா.டெனிஸ்வரன்,  வட மாகாணசபை உறுப்பினர்களான  கௌரவ.குணசீலன், கௌரவ.சிறாய்வா, மற்றும் குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கிராமமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


இந் நிகழ்வில் பங்குபற்றிய பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் ,


முள்ளிக்குளம் கிராமத்து மக்களின் இந்த விடாமுயற்சியான போராட்டதிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்ததோடு இந்த காணிகளை விடுவிப்பதற்கு அனுமதியளித்த மேதகு. ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும்  இந்த போராட்டத்துக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


மேலும் விடுவிக்கப்படாத பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான பொது இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப் பிரதேசங்களை மக்களின் பாவனைக்கு விட்டுக்கொடுத்து தங்களது முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றியுதவுமாறும் கேட்டுக்கொண்டார்.


ஏற்கனவே மக்களின் காணிகளில் இருந்து பின்னர் அக் காணிகளை மக்களிடம் கையளித்த இராணுவத்துக்கு அமைச்சர் தனது நன்றியினை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.


மேலும் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட இடங்களில் குடியேறிய மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் துரித  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.