May 03

ஒன்ராரியோவின் புதிய குடிவரவாளர்களுக்கான நிதி அறிவூட்டல் கற்கை நெறி

ஒன்ராரியோவின் நிதி அமைச்சும், Credit Canada நிறுவனமும்  இணைந்து புதிய குடிவரவாளர்களுக்கான நிதி அறிவூட்டல் கற்கை நெறியொன்றை இலவசமாக நடாத்த முன்வந்துள்ளன. “Newcomers & Money 101” எனப் பெயரிடப்பட்ட இக்கற்கை நெறியின் மூலம் புதியகுடிவரவாளர்கள் தங்களை பணரீதியில் நீண்டகாலத்திற்கு நிலை நிறுத்திக்கொள்ளத் தேவையான அறிவும், பயிற்சிகளும் வழங்கப்படும்.  

Newcomers & Money 101 என்ற இந்த நிதி அறிவூட்டல் கற்கை நெறி, நிதி அறிவியலின் நான்கு முக்கிய அம்சங்களான (1) கனேடிய வங்கி முறைமை, (2) நிதி முகமைத்துவம் மற்றும் வரவு செலவு திட்டமிடல் (3) கடன்களைக் கையாளுதல்   மற்றும் (4) மோசடி என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

மாகாணத்தின் பல இடங்களில் இக்கற்கை நெறி நடாத்தப்படுவதுடன், கற்றல் குறிப்புக்கள், பயிலரங்கு உள்ளடக்கம் என்பன அவரவர் மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.  இம்மொழி பெயர்ப்புகளிற்காக குடியமர்வுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் உதவியும் பெறப்பட உள்ளது.