May 02

போலித் திருமணங்களைக் கண்டுபிடிப்பதில் லிபரல் அரசு இருமடங்கு கவனம் செலுத்தும்

வாழ்க்கைத் துணையைக் கனடாவிற்கு வரவழைத்ததன் (Spousal sponsorship) பின்னர்,  வரவழைக்கப்பட்டவர் கனடாவில் நிரந்தர வதிவுரிமை  பெற இரண்டு வருடங்கள் இணைந்து வாழவேண்டும் என்ற நிபந்தனையை லிபரல் அரசு சென்ற வாரம் இரத்துச் செய்துள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசேன் அவர்களினால் சென்ற வாரம் வெளியிடப்பட்ட இவ்வறிவித்தல், குடிவரவுச் செயற்பாட்டாளர்களினால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.  ஆயினும் கனடாவிற்குள் நுழைவதற்காக நடாத்தப்படும் போலித்  திருமணங்களைத் (marriage frauds) தடுத்து நிறுத்தும் முகமாக,  முன்னைய பழமைவாத அரசினால் 2012 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதிமுறை தளர்த்தப்பட்டதன் காரணமாக மீண்டும் போலித் திருமணங்கள் பல தலைதூக்கலாம் என்ற கருத்தும் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர்  “நிபந்தனைக்குட்பட்ட நிரந்தர வதிவுரிமை” (Conditional permanent residency) என அழைக்கப்படும் இந்த விதிமுறை காரணமாக, குடும்ப வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் என்பன உள்ள திருமண பந்தங்களில் உள்ளவர்கள், 2 வருட காலத்திற்கு அவற்றை விட்டு வெளிவர இயலாத நிலைகளில் இருக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.   ஆதலால் இவ்விதி தளர்த்தப்பட்ட அதேவேளை,போலித் திருமணங்களைக் கண்டுபிடிப்பதில் லிபரல் அரசு இருமடங்கு கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.

மேலும் முன்னரங்கக் குடிவரவு அலுவலர்கள் போலித் திருமணங்களைக் கண்டுபிடிப்பது தொடர்பாக மிகக் கடுமையான பரிசீலனை முறைகளை மேற்கொள்வார்கள் எனவும், ஒருதடவை வாழ்க்கைத்துணையை வரவழைக்க அனுசரணை (Sponsor) செய்தவர்கள், மீண்டும் ஒரு தடவை அவ்வாறு செய்ய 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.