May 02

ஒன்ராரியோவின் மரக்குற்றிகள் ஏற்றுமதி தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜிம் பீட்டர்சன் நியமனம்

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மரங்களுக்கு புதிய வரிவிதிப்பினைஅண்மையில் அமெரிக்கா அறிவித்திருந்தது, இதற்குக்  கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கனடா - அமெரிக்கா இடையிலான இந்த மர வணிகமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டுடன் பல தசாப்த காலங்களாக இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனேடிய மத்திய  அரசில் சர்வதேச வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த ஜிம் பீட்டர்சன் என்பவர் ஒன்ராரியோவின் மர ஏற்றுமதி தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே  பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட மரக்குற்றிகள் தொடர்பான ஏற்றுமதி உடன்படிக்கையிலும்  ஜிம் பீட்டர்சன் பங்கேற்றிருந்தார். இவர் மர ஏற்றுமதி தொடர்பாக கனடா-அமெரிக்கா இடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் முக்கிய பங்காற்றுவதுடன் ஒன்ராரியோ மாகாணத்தின் நலன்களைக் கவனிப்பதில் கவனம் செலுத்துவார்.

ஒன்ராரியோவின் வனத்துறை வருடாந்தம் $ 15.5 பில்லியன் வருவாய் ஈட்டுவதுடன்,172,000 தொழில்வாய்ப்புக்களுக்கு இடமளிப்பதாகவும் அமைகின்றது.