May 02

நடுவானில் தடுமாறிய விமானம்: 29 பயணிகள் காயங்களுடன் தப்பினர்

மோசமான வானிலை காரணமாக மாஸ்கோவில் இருந்து பாங்காக் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் நடுவானில் தடுமாறியது. இதில் 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு நேற்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் மேலெழும்பிய 40-வது நிமிடத்தில் மோசமான வானிலையில் சிக்கிக் கொண்டது.

இதனால் நடுவானில் விமானம் தடுமாறியது. இதில் 29 பயணிகள் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. எனினும் பைலட்டுகள் விமானத்தை சாதுரியமாக செலுத்தி பாங்காக் சென்றடைந்தனர். காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விமான பயணத்தின்போது சீட் பெல்ட் அணியாத பயணிகள் கடுமையாக காயமடைந்தனர். விமானத்தின் மேற்பகுதி கேபினில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்ததில் பலருக்கு தலை, முகத்தில் காயம் ஏற்பட்டது என்று பயணிகள் தெரிவித்தனர்.