Nov 15

கடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது!

பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமாக இருக்கும் சூரி, என் உழைப்புக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”நீ உழைத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள்.

அதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். எந்த உதவியும் இல்லாமல், ஊரை விட்டு ஒடிவந்து, படுக்க இடமில்லாமல், உடுத்த துணி இல்லாமல், சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.

பல ஆண்டுகளாகச் சென்னையில் இருந்தேன். போராடி சினிமா வாய்ப்புத் தேடினேன். நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு கட்டத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தது.

நான் நடித்த படங்கள் ஹிட்டாக, பிரபலம் ஆனேன்.

முதல் சில ஆண்டுகள் எனக்கு சினிமா குறித்து பயம் இல்லை. பலர் ஆட்டோ கிராப் வாங்க ஆரம்பித்ததும் எனக்கு பயம் வந்தது.

என் உழைப்புக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என நகைச்சுவை நடிகர் சூரி தெரிவித்தார்.

இதேவேளை மதுரையில் அம்மா உணவகம் என்ற பெயரில் சூரி ஆரம்பித்துள்ள பரோட்டா கடையினை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மீதுள்ள நட்பு காரணமாகத் திறந்து வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.