Nov 15

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: சசிகலா குடும்பம் சொத்து குவிக்க ஜெயலலிதா உடந்தையா?

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை. ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சேகர் ரெட்டி, ராமமோகன் ராவ் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை முடிவு என்ன? என்று கேட்கிறார்கள்.

பொறுத்திருந்து பாருங்கள். இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கைகள் இருக்கும். வருமான வரித்துறை வட்டத்துக்குள் இருந்து யாரும் தப்பிவிட முடியாது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் 1000த்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து மிகப்பெரிய சோதனை நடத்தி உள்ளனர். அப்படி என்றால் இந்த சோதனைக்கு எப்படி திட்டமிடப்பட்டு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏழரை கோடி தமிழ் மக்களின் சொத்துக்கள் ஆகும். சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையை குறை கூறுபவர்கள், நடுரோட்டில்  பலர் பார்க்க நடந்த ஒரு கொடூர கொலைக்கு உடந்தையாக உள்ளவர்கள் போல் ஆவர்.

சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்புக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடந்தையாக இருந்தாரா? என்பது பற்றி விசாரணையில் தெரிய வரும். அதிமுகவை அழிக்க வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவை யாரும் அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்களாகவே அழிந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.