Nov 15

இந்தியாவுக்கான விசா விதிகள்; ஜப்பான் தாராளம்

சுற்றுலா தொழில் மற்றும் கல்விக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கான விசா நடைமுறையை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜன.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியர்கள், ஜப்பானில் தொழில் புரியவும், இங்கு வந்து கல்வி பயிலவும் ஏதுவாக அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

'சிங்கிள் என்ட்ரி' விசா மற்றும், 'மல்டிபுள் என்ட்ரி' விசா என, இரு வகை விசாக்கள் உள்ளன. புதிய விதிகளின் படி, மல்டிபுள் என்ட்ரி விசா காலத்தை, 5 ஆண்டுகளாகவும், ஒரு முறை வரும்போது, அதிகபட்சம், 90 நாட்கள் தங்கும் வகையிலும், விதிகளில் திருத்தம் செய்யப்படும். 

விசா விதிகள் தளர்வோடு இல்லாமல், விசா கோரி விண்ணப்பிக்கையில், அதோடு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். விசா விண்ணப்பத்திற்கான புதிய விதிகள், அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.