Nov 14

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் – பாகம் : 2

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும், அரசியல் அமைப்பு மாற்றத்தையும் ஊக்கப்படுத்தும் சில மேலைதேய இராஜதந்திரிகள் அரச உதவியுடன், மக்கட்பரம்பல் சமநிலையை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்மூலம் சிங்கள மயமாக்கல் நிறைவேறுவதையிட்டோ அல்லது தமிழர் தாயக கோட்பாடு வலுவிழந்து போவதையிட்டோ அவர்கள் கவலை கொள்பவர்களாக தெரியவில்லை.

பெரும்பான்மைவாத ஜனநாயக அரசியலை அவர்கள் ஆதரிப்பதற்கான காரணம், சிங்கள பெரும்பான்மை இனத்தின் மத்தியில் மேலைத்தேய சக்திகளாக தம்மை காட்டிகொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகள், சிறிலங்காவில் அரசியல் மாற்றத்தை உருவாக்கவல்ல சக்திகள் தாமே என்று மேலைத்தேச இராஜதந்திரிகளை நம்ப வைத்துள்ளமையே ஆகும்.

அத்துடன் தமிழ் மிதவாத கட்சி தலைவர்களை வீரியம் குறைந்த நிலையில் வைத்திருப்பதற்கு ஜனநாயகத்திற்கு இடையூறு செய்பவர்களாக காரணம் காட்டி மேலைத்தேய, இந்திய தலையீடுகளை பயன்படுத்துகின்றனர். இது சிங்கள தலைவர்களது பெரும்பான்மைவாத ஜனநாயகத்தின் சிறப்பம்சமாகும்.

பெரும்பான்மை வாக்குபலத்தினால் சிறிலங்காவில் மேலைத்தேய கொள்கை சார்பு அரசியல் நடத்த முடியும் என்பதை, உள்நாட்டு அரசியல் பெறிமுறைக்குள் தமிழர்களது முக்கியத்துவத்தின் தேவையை தாழ்த்தி மதிப்பிட வைப்பதன் மூலம், இலங்கைத்தீவில் தமிழ் மிதவாத கட்சித்தலைவர்களை கொழும்பை நோக்கி கையேந்தி நிற்கும் கையாலாகாத நிலையை சிங்களம் தக்கவைத்து கொண்டிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் தமிழர்களது வாக்கு மிதவாத தமிழ் தலைவர்களது செயல்திறனற்ற நிலையால் பெரும்பான்மை அரசியலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருந்தது. இது தமிழர்களது பலம் மேலைநாட்டு இராஜதந்திர நகர்வுகளுக்கு முற்றமுழுதான தேவையற்ற நிலையை வெளிக்காட்டி இருந்தது.

சிறிலங்காவில் மேலைத்தேய சார்பாக இருக்கக்கூடிய ஆளும்தரப்பினர் சீன சார்பாகவோ அல்லது மேலைத்தேய விதிகளுக்கு அப்பால் சிந்திக்க முற்படும் போதோ மட்டும் தமிழர் மீது நடத்தப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புகூறல் எனும் தந்திரத்தை ஒரு காரமூட்டும் அல்லது சிறிலங்கா ஆட்சியாளரை மிரட்டும் உபகரணமாக மேலைத்தேயம் வைத்து கொண்டிருக்கிறது.

இதனால் மேலைதேயம் விரும்பாத வகையில் தமிழர்கள் அதீத தேசியவாதத்துடன் செயற்படும் போது தமிழர்களையே கடிந்து கொள்ளும் போக்கை கடைப்பிடிக்கின்றது. International Crisis Group 2010 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அதீத இனஅழிப்பு முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியாக சுதந்திர வேட்கை கொண்டு போராடுவதும் விடுதலையை நோக்கி குரல் எழுப்புவதுவும் உள்நாட்டு தமிழர்களிடம் இருந்து புலம்பெயர் தமிழர்கள் இடைவெளியை உருவாக்கி கொள்கின்றனர் என தமிழ் மக்கள் மீது அழுத்தம் பிரயோகித்திருந்தது.

இங்கே ஈழத்தமிழ் மக்களின் பலம் ஓங்குவது மேலைத்தேய நலன்களுக்கு அப்பால் சிறிலங்கா அரசியலில் தளம்பல் நிலையை ஏற்படுத்தும் என்பது பார்வையாக உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்தும் நகர்வுகள் குறித்தும் பார்ப்பது உலகத்தில் தமிழ்மக்களது செயற்பாடுகளை நீர்த்துப்போக செய்வதில் எவ்வாறு பல்வேறு சக்திகளும் செயற்படுகின்றன என்பதை காணக்கூடியதாக இருக்கும்.

2009 ஆம் ஆண்டிலிருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல உதயமாகின. சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிரூபிப்பதில் உலகநாடுகள் மத்தியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும் முயற்சிகள் செய்து வருகின்றன. இருந்தபோதும் கூட, அமைப்புகள் மத்தியில் திடமான கொள்கை இணக்கப்பாடு ஏற்படாமை பெரியதொரு குறையாக இருந்து வருகிறது.

diaspora (1)

ஒவ்வொரு புலம்பெயர் அரசியல் செயற்பாட்டு அமைப்புகளும் தம்மை நிறுவும் செயற்பாட்டில் பெருமுயற்சிகள் செய்து கொண்டன. அரசியல் மூலோபாயங்களை தமக்கென தனித்துவமான முறையில் வகுத்துக் கொண்டன, புலம்பெயர் தமிழ் மக்களிடையே தமக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு செயற்பட்டன.

இதற்கான போட்டியில் சில அமைப்புகள் தமது போட்டி அமைப்புகளை தேசியவாத வீரியம் அற்றவையாக குறைகூறும் நிலைக்கு தள்ளப்பட்டன. அல்லது தாமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறுவதில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களையும், அரச பிரதிநிதிகளையும் குழப்பத்திற்குள் உள்ளாக்கி விட்டன. ஒரு தாய் நிறுவனமோ அல்லது ஏற்பாட்டாளர் நிறுவனமோ இல்லாத நிலை இதில் பெரும் வலுவற்ற, ஒழுங்கற்ற செயற்பாடுகளுக்குள் தள்ளிவிட்டது.

ஆனால் இவை விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தின் முடிவுகளுக்கு பின், 2009 ஆம் ஆண்டிலிருந்து ஆயுதப்போராட்டம் குறித்த செயற்பாடுகளில் அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் மிக குறைந்த நம்பிக்கையை பிரதிபலித்ததை மேற்கத்தேய ஆய்வாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் மிக கவனமாக சீர்தூக்கிப் பார்த்துள்ளனர் என்பது கவனத்திற்கு உரியது.

அமைப்புகள் மத்தியில் தமிழ் மக்களது அபிலாசைகள் குறித்த நியாயமும் விடுதலைப்புலிகளின் ஆகக்குறைந்த பேச்சுவார்த்தை பொருளான தாயக கோட்பாட்டிலிருந்து விலகாது இருப்பது தனித்துவமானது. ஆனால் தனிநாட்டை கோரிக்கையாக கொண்டு கருத்தாதரவு தேடி செயற்பட்டவர்களுக்கும், கூட்டாட்சி இருந்தாலே போதும் என்ற கருத்தாதரவு தேடி செயற்பட்டவர்களுக்கும் இடையில், சர்வதேச நிறுவனங்களும், இராஜதந்திரிகளும் குழப்பமடைந்து போயுள்ளனர் எனலாம்.

அதேபோல இது ஒரு இனப்படுகொலை என்ற வாதம் கொண்டவர்களுக்கும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்செயல் என்ற வாதம் கொண்டவர்களுக்கும் இடையில் சர்வதேச நிறுவனங்களும் இராஜதந்திரிகளும்  குழப்பப்பட்டு விட்டனர். இதனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே தலைகுனிவுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.

தொடர்பாடலில் சர்வதேசம் பல்வேறு இலகுவான- எந்தவித கட்டுப்பணமும் அற்ற வசதிகளை கொண்டிருக்கும் இக்காலத்தில், சிறிய நிறுவனங்கள் தமக்குள்ளே ஒருமித்த கொள்கை உடன்பாடு அற்று இருப்பது அவர்கள் மத்தியில் குழப்பநிலை இருப்பதையே காட்டி நிற்கிறது என்பது மேலைத்தேய ஆய்வாளர் ஒருவரது பார்வையாக உள்ளது.

diaspora (3)

சிறு நிறுவனங்களின் கைகளிலே சிக்கி திடமான கொள்கை இல்லாதவர்களை நாம் ஒற்றுமைப்படுத்தி சிறிலங்கா அரசின் கீழ் வாழ கற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று மேலைத்தேய இராஜதந்திரிகள் கூறுவதற்கு இந்த உடன்பாடு அற்ற நிலையே காரணமாக இருக்கிறது.

ஆக, உலகத்தில் தமிழ்மக்களது அபிலாசைகளுக்காக புலம்பெயர் நாடுகளில் கருத்தாதரவு திரட்டுவதில் நீத்துப் போகக்கூடிய வகையில் செயற்படும் முதலாவது எதிர் சக்தி என்பது ஒற்றுமையற்ற தமிழினமே ஆகும்.

புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் சின்னஞ் சிறிய தீவான சிறிலங்கா அரசின் இராஜதந்திர பலத்தை விட அதிகம் பலம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. சர்வதேச அளவில் சிறிலங்கா சிறிய அரசாக உள்ளது. புலம்பெயர் கருத்தாதரவு வலை அமைப்புகளின் செல்வாக்கு சர்வதேச தொடர்பு சாதனங்களின் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் அதீத செல்வாக்கு கொண்டதாக காட்டப்படுகிறது.

சர்வதேச சமுகத்தை தமது பக்கம் திருப்புவதற்கு, ஒர் அனுதாப மனச்சுழலை ஏற்படுத்துவதுடன் ஒரு சிறிய அரசை பிரிவினைவாதிகள் கூறுபோட பார்க்கின்றனர் என்ற விவாதமே போதுமானதாகும். ஏனெனில் உலகில் எந்த தேசிய அரசும் பிரிவினையை ஆதரிப்பனவாக இல்லை.

புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்ற பிரச்சாரம் குறித்தும் ஐரோப்பிய கூட்டமைப்பால் நிறுத்தப்பட்டு வைத்திருந்த GSP வரிச்சலுகை புலம்பெயர் தமிழ் சமுதாயத்தின் போராட்டங்களின் காரணமாகவே உருவானது என்பதுவும் அனுதாப மனநிலையை உருவாக்கக் கூடிய விவாதங்களாக சர்வதேச சழூகத்தின் முன் வைக்கப்படுகிறது.

பல மில்லியன் டொலர் வியாபார இழப்பு மட்டுமல்லாது பல ஆயிரக்கணக்கான, குறிப்பாக பெண் தொழிலாளர்கள் ஆடை உற்பத்தி துறையில் வேலை இழந்து போயினர் என புலம்பெயர் தமிழ் மக்கள்மீதே பழியை போட்டு இனஅழிப்பு, குற்றச்சாட்டையே புரட்டிப்போடும் அனுதாப அலைகள் உருவாக்கப்பட்டது.

அதேவேளை அரசியல் தீர்வு குறித்து சர்வதேச இராஜதந்திரிகள் பேசும் போது புலம்பெயர் தமிழ் சமுதாயம் பெரிய அளவில் தாக்கம் விளைவிக்கும் ஒரு தனி அரசியல் செயல்வடிவம் அல்ல என்றும் வலியுறுத்தி பெரும்பாலான புலம்பெயர் சமுதாயம் மிதவாத போக்கை கொண்டவர்கள் என்று மீண்டும் புரட்டிப்போட்டு விவாதிக்கும் தந்திரம் பயிற்றப்பட்டு பேணப்படுகிறது.

விடுதலைப்புலிகள் இல்லாத காலத்திலும் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற அறிக்கைகளை வெளியிடுவதில் சிறிலங்கா அரச அதிகாரிகள் தவறுவதில்லை.  இந்திய செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பேட்டிகண்ட போது சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்னமும் செயலாற்றும் வல்லமையுடன் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப்புலிகளும் இருக்கிறார்கள் என வரட்டு காரணம் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட நிலையை வைத்திருப்பதுடன் பல புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சட்ட அங்கீகாரம் பெறமுடியாத நிலையை ஏற்படுத்துவது, தமிழ் மக்களும் எந்த அமைப்புகளும் இணைந்து செயலாற்ற முடியாத நிலையை வைத்திருப்பது என்பன முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு மனப்படத்தை உருவாக்குவதில் பெரும் கவனமாக கொண்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் உள்ளக முரண்பாடுகளை பகிரங்கப்படுத்துல், அவற்றின் ஜனநாயக கலாச்சாரம் ஆகியவற்றை கேள்விக்கிடமானதாக ஆக்கி மக்கள் தொடர்புசாதனங்கள் மூலம் எப்பொழுதும் சந்தேக கருத்துகளை உருவாக்குவது சிறிலங்கா அரச சார்பு தனிமங்களின் முக்கிய செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

ஆக புலம்பெயர் தமிழ்மக்களது செயற்பாடுகளை நீர்த்துப்போக செய்வதில் இரண்டாவதாக சிறிலங்கா அரசுவும் அதன் திட்டமிட்ட செயற்பாடுகளும் அடுத்த முக்கிய காரணியாக குறிப்பிடலாம்.

diaspora (2)

மேலும் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான அரசியல் பாரம்பரியம் எவ்வாறு புலம்பெயர் சமுதாயங்களின் செயற்பாட்டில் தலையிடுகிறது என்பது அடுத்த முக்கியமான விடயமாகும். இந்த உலகில் சிறிய அரசுகளும், பெரிய அரசுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புற்று வாழ்வதே ஒரு சமூகமாக கருதப்படுகிறது.

இந்த சமூகத்தின் மத்தியில் யூதர்கள், ஆர்மேனியர்கள், குர்திஸ் இனத்தவர்கள், இந்தியர்கள், சீனர்கள், கியூபர்கள், பாலஸ்தீனியர்கள், அல்பானியர்கள், கொசோவோக்கள், என உலகில் உள்ள ஒவ்வொரு இனத்தவருக்கும் புலம்பெயர்ந்த தொடர்புகளை கொண்டவர் வெளிநாடுகளில் அரச எல்லைகள் கடந்து வாழ்ந்து வருகின்றனர்.

வல்லவனுக்கே வாழ்வுண்டு என்ற வகையில் பெரிய அரசுகள் தம்மை வல்லரசுகளாக கட்டிஅமைத்து கொள்வதிலும் வளர்ந்து வரும் அரசுகள் பிராந்திய முன்னிலை அரசுகளாக தம்மை நிர்மாணிப்பதிலும் போட்டிகளில் இருக்கும் இவ்வேளையில் நாடுகள் கடந்த புலம்பெயர் சமுதாயங்கள் புதிய சர்வதேச அரசியல் நீரோட்டத்துடன் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில்பயன்படுத்தாது போனால் தமது நாட்டிற்கும் தமது இனத்திற்கும் பல்வேறு எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் எனும் எண்ணப்பாட்டையே கொண்டுள்ளனர்..

அரசியல் எல்லைகளால் பிரிக்கப்பட்டு வாழ்ந்து வரும் புலம்பெயர் சமுதாயங்கள் தமது தேசியத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளனர்.  அரசுகளின் பிரதிநிதித்துவம் கொண்ட பொது நிறுவனங்களில் உதாரணமாக சர்வதேச மனித உரிமை மையம் போன்ற நிறுவனங்களில் தமது இனத்தின் உரிமைகளையும் இனம்சார்ந்த குற்றச்சாட்டுகளையும் எடுத்து விளக்கும் போது அரசுகள் முன்னுரிமை பெறுவதையும் பரிந்துரைகளுடன் குற்றங்களில் இருந்து விடுபட்டுக் கொள்வதையும் சகித்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

புலம்பெயர் சமுதாய அமைப்புகள் மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் இனஅழிப்பு விவகாரங்களிலும் ஆதாரம்மிக்க குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதிலும் அரசிற்கு மேலும் காலஅவகாசம் வழங்குதல் என்ற முடிவுக்கே இறுதியில் வந்து முடிவது கவனிக்கத்தக்கதாகும். இதனால் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊக்கம் கெட்டு போவதற்குரிய சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படுகிறது.

புவிசார் அரசியல் நலன் குறித்து நகர்வுகளை முன்னெடுக்கும் அதிகாரம் மற்றும் பொருளாதார முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கான உரிமம் ஆகியன அரசுகளின் கைகளிலேயே இருப்பதால் அரசுமுறை செயற்பாடுகளே சட்ட அங்கீகாரம் பெற்றவையாக பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல்  நிலைமையை எடுத்து நோக்கமிடத்து ஒருமித்த நாடு என்றோ அல்லது ஒற்றைஆட்சி என்றோ தீர்மானங்களை தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமிடத்து  தாராள உரிமைகள் குறித்து பேசுவதானால் நாட்டை விட்டு வெளியேறுவது மட்டும் தான் ஒரே வழியாகும்.

அதேபோல இதனை ஆமுல்படுத்தும் அரசின் நோக்கமும் ஆட்சி உரிமை குறித்து சிந்திக்கும் சிறுபான்மையினரை தனது பிராந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்து வெளியேற்றுவது தான் ஒரே தெரிவாகும்

இதனால் மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழர் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை மீண்டும் ஏற்படவே வாய்ப்புள்ளது

பொதுவாக புலம்பெயர் சமுதாயங்களின் மத்தியில் இருக்கக் கூடிய அமைப்புகள் தமக்குள்ளேயே போட்டி மனப்பாங்கு கொண்டன. தமது சமுதாய அடையாளத்தை பேண வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலும் பார்க்க,  தமது சமுதாயத்தில் தாமே முழுப்பிரதிநித்துவத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவையாக காணப்படுகின்றன.

இந்தநிலையை சாதகமாக கொண்டு சிறிலங்கா அரசு உட்பட சர்வதேச அரசுகள் போட்டி நிலையை பேணுவதன் முலம் அமைப்புகளை சிதறடித்து விடுகின்றன.

diaspora (4)

மூன்றாவதாக அரசு முறை சர்வதேச பண்பாடு ஈழத்தமிழ் சமுதாயத்தின் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை நீத்துப்போக செய்வதில் பங்களிக்கின்றன

புலம்பெயர் அமைப்புகள் தமக்கு மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையும் தாயகத்தில் செயலாற்றக் கூடிய புலம் பெயர்சார் அமைப்புகளுக்கும் அல்லது தேசியவாத அமைப்பகளுக்கும் இடையில் தொடர்பு இல்லாத நிலையும் மிகவும் அபாயகரமானதாக  புலம்பெயர் சமூகங்கள் சார்பாக ஆய்வு செய்யக் கூடியவர்களின் கருத்தாக உள்ளது.

ஆபிரிக்கநாடு ஒன்றிலிருந்து பெற்று கொண்ட அனுபவங்களில் இருந்து, புலம்பெயர் சமுதாய அபிலாசைகளை திசைதிருப்பி விடுவதற்கும் அதன் மூலம் மிதவாத ,சமுதாய எதிர் போக்காளர்கள் அல்லது அரச ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இடங்ளில் அரச சார்பு குழுகளுடன் குழப்பமடைந்து போகும்தன்மை அதிகம் உள்ளதாக சந்தர்ப்பங்களை ஆதாரம் காட்டி ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.

புலம் பெயர் அமைப்பு ஒன்று தாயகத்தில்இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முன்வைத்து கருத்தாதரவு செய்து தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு அரச பிரதிநிதிகளை உண்மைநிலை அறிந்து வரும் பொருட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்குமிடத்து, தாயகத்தில் இருக்க கூடிய மிதவாதிகளும் அரச விசுவாசிகளும் அந்த பிரதிநிதிகளை நட்சத்திர விடுதிகளில் இராப்போசன விருந்துகளில் பங்குபற்ற வைத்து, திருப்பி அனுப்பி வைத்தமை அந்த அனுபவமாக அரச பிரதிநிதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இத்தகைய அனுபவங்கள் போலவே இன்று சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் ஒவ்வொரு அரச உயர்மட்ட அதிகாரிகளும் கொழும்பையும் யாழ்பாணத்தையும் இருவேறு அதிகாரங்களாக பார்க்கின்றனர். இத்தகைய நிலை புலம்பெயர் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளினது செயற்பாட்டின் விளைவாகவேயாகும்.

ஆனால் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் தமிழ் தலைவர்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திக்கும் போது அவர்களது ஒரே கருத்தை பிரதிபலிக்கின்றனரா என்பது கேள்விக்குரியதாகும். இங்கே புலம் பெயர் அமைப்புகளுக்கும்கொழும்யை நோக்கி அரசியல் செய்பவர்களுக்கும், கூட்டாட்சி சிந்தனை கொண்ட யாழ்ப்பாண தலைவர்களுக்கும் இடையில் கருத்து ஒற்றுமை பேச்சு ஒற்றுமை, செயல்ஒற்றுமை, மிகமுக்கியமானதாகும்.

இந்த ஒற்றுமை முன்றும் ஒரு நேர்கோட்டில் வரும் போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெளிவு பெறுவார்கள். அத்துடன் சர்வதேச சமுதாயமும் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும்.

இல்லாது போனால் சிறிலங்கா இங்கே வளர்ச்சி கொண்டுள்ளது அங்கே வளர்ச்சி கண்டுள்ளது என்று தேவையற்ற துறைகளை எல்லாம் உதாரணமாக காட்டி, சர்வதேச நிறுவனங்களில் ஒவ்வொரு மீளாய்வு அறிக்கையிலும் சிங்கள பௌத்த மேலாதிக்க ஒற்றையாட்சியை தக்கவைத்து கொள்ளவே எத்தனிக்கும்.