May 02

கண்டி கெட்டம்பேயில் ஸ்ரீ லங்கா சு.க. மே தின பேரணியும் கூட்டமும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியும் பிரதான கூட்டமும்   அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி  கெட்டம்பேயில் இடம்பெற்றது. 

கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மே தின கூட்டம் தொடர்பில் இலங்கையின் தென் பகுதியில் இருந்து மட்டும் நூற்றுக்கும் அதிகமான பஸ் வண்டிகள் கண்டிக்கு பயணித்திருந்தன.

ஜனாதிபதியின் சொந்த ஊரான பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மட்டும் 162 பஸ் வண்டிகள் கண்டி நோக்கி மக்களை அழைத்துச் சென்றிருந்தன.

ஓட்டுமொத்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளவிய ரீதியில் 2ஆயிரம் பஸ் வண்டிகளில் கட்சியின் ஆதரவாளர்கள் கண்டிக்கு சென்றிருந்தனர். ஆதனை விடவும் ரயில் ஊடகவும் கண்டி நகருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் சென்றிருந்தனர். 

கண்டி கண்ணொருவையில் இருந்து ஒரு தொகுதி ஆதரவாளர்களும் கண்டி உயர் மகளிர் கல்லூரி அருகில் இருந்தும் மற்றொரு தொகுதி ஆதரவாளர்களும்  பிரதான கூட்டம் நடைபெறும் கெட்டம்பே  மைதானத்தை நோக்கி 2மணியிலிருந்து நகர ஆரம்பித்தனர்.

இரு பேரணிகளும் கண்டி கெட்டம்பே நோக்கி கண்ணொருவ - கண்டி பிரதான வீதி ஊடாகவும், பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை ஊடாகவும்  கெட்டம்பே மைதானத்தை 3மணியளவில் கொட்டும் மழைக்கு மத்தியில் வந்தடைந்தனர்.

இந்தக்குழுவில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் , பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அணியினர் என 20இற்கும் மேற்பட்ட தரப்புக்கள் பேரணியில் கலந்து கொண்டிருந்தன. அத்துடன் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த மக்களுமாக மூவின மக்களும் பங்கேற்றிருந்தனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணியின் ஏற்பாடில் ஒரே அணியில் சரியான பாதையில் எனும் தொனிப்பொருளில் பிரதான கூட்டம் ஆரம்பமானது.

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் சுதந்திரக் கட்சியின் கூட்டம் தடைகளின்றி இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.