May 02

அம்பாறையில் நடைபெற்ற த.தே.கூ.வின் மே தினக்கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பிரதான மே தினக்கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் காலை 9.30இக்கு ஆரம்பமானது.

பண்பாட்டு நடனங்கள், விவசாயிகளை பிரதிபலிக்கும் காட்சிப்படுத்தல்கள், பெண்கள் அமைப்புக்கள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான கோரிக்கைகளை மையப்படுத்திய தரப்புக்களின் பங்கேற்புடன் நகர ஆரம்பித்த பேரணியானது அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை முற்பகல் 11 மணிக்கு வந்தடைந்தது.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம், சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் பிரதான கூட்டம் நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, பாரர்ளுமன்ற குழக்களின் பிரதி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வியாழேந்திரன், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், துரைரெட்ணசி;ங்கம், மாகாணசபை அமைச்சர்களான தண்டாயுதபாணி, துரைராஜசிங்கம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள் பொது என பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சித்தலைவர் உட்பட முக்கியஸ்தர்களின் உரைகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினத் தீர்மானங்கள் அனைவரும் முன்னிலையில் தமிழரசுககட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் பகிரங்கமாக வாசித்தார்.

அதன் பின்னர்  பொதுமக்கள் உட்பட கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவரினதும் ஏகமனதான ஒப்புதலுடன் அவை நிறைவேற்றப்பட்டமை குறிப்பித்தக்கது.