Apr 30

ஐ.பி.எல்.திருவிழா; சூப்பர் ஓவரில் சாதித்தது மும்பை

ஐ.பி.எல் தொடரின் 35ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயண்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

நாணயச்சுழற்சியில் வென்று பேட்டிங்கை தெரிவு செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஸன், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 6 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான இஷான் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தார்.

பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர். குறிப்பாக குஜராத் அணியின் கேப்டன் ரெய்னா ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் ஜடேஜா, பல்க்னர், டை ஆகியோரின் போதிய பங்களிப்பால் குஜராத் அணி கௌரவமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. 

மும்பை அணி சார்பின் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், மலிங்கா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பார்தீவ் படேல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தார். 44 பந்துகளுக்கு 9 பவுண்டரிகளும், 1 சிக்சருடன் 70 ஓட்டங்களில்; அவர் ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு பொறுமையை சோதித்தனர். மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா 5 ஓட்டங்களுடன் வெளியேறி இந்த முறையும் சொதப்பினார்.

பொல்லார்ட் மற்றும் பாண்டியா சிறிது சிறிதாக ஓட்டங்களைச் சேர்க்க அணியின் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. குஜராத் அணியின் இறுதி கட்ட நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியின் பேட்டிங் வரிசை சிதறியது.

20 ஓவர்களின் முடிவில் 153 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. 

ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறை மும்பை அணியில் பொல்லார்ட் மற்றும் பட்லர் களமிறங்கினர். குஜராத் அனியின் பல்க்னர் பந்து வீசினார். முதல் பந்தில் பட்லர் ஒரு ஓட்டத்தை எடுத்தார்.

இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பொல்லார்ட், மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார். நான்காவது பந்தில் பொல்லார்டு கேட்ச் ஆக, ஐந்தாவது பந்தில் பட்லர் கேட்ச் ஆனார். இதனால், மும்பை அணி சூப்பர் ஓவரில் 11 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.

12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் பின்ச், மெக்கல்லம் களமிறங்கினர். 

மும்பை அணியின் பும்ரா பந்து வீசினார். முதல் பந்தை பும்ரா நோ போலாக வீச குஜராத் அணிக்கு ப்ரீ ஹிட் பால் கிடைத்தது. ஆனால், அந்த பந்தில் பின்ச் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்தார். இரண்டாவது பந்தை வைடாக பும்ரா வீச, குஜராத் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

பின்னர், அடுத்தடுத்த பந்துகளை பும்ரா மெதுவாக வீசியதால் குஜராத் வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க திணறினர். இறுதி பந்தில் 7 ஓட்டங்கள்; எடுத்தால் என்ற நிலையில் மெக்கல்லமால் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதனால், பரபரப்பான இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பாண்டியா தெரிவனார்.