Nov 08

தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும் - யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே!

ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. தமிழரசு கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி இவர்கள் பேசியதெல்லாம் என்ன - இனவாதம்தானே என்று சாதாணரமாக கூறிச் செல்லுபவர்கள் இருக்கின்றனர்.

தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது என்ன? இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு செய்தியை காண முடிந்தது. புதிய அரசியல் யாப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறியிருக்கின்றார். குணரட்ன இவ்வாறு கூறுகின்ற போது அந்தச் சபையில் அமர்ந்திருந்த பௌத்த பிக்குகள் உட்பட எவருமே அதனை கண்டித்துப் பேசவில்லை. அவ்வாறாயின் இதன் பொருள் என்ன?

இலங்கை சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற காலத்திலிருந்து, தமிழ்த் தலைவர்கள் தொடர்ச்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஜம்பதிற்கு ஜம்பது கோரிக்கை தொடக்கம் தமிழ் மக்களின் சார்பிலான அரசியல் கோரிக்கைகள் காலத்திற்கு காலம் மேலெழுந்திருக்கின்றன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் காலத்தில் அது, பண்டா செல்வா என்றும் பின்னர் டட்லி செல்வா என்பதாகவும் நீண்டு சென்றது.

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஜம்பதுக்கு ஜம்பது என்னும் கோரிக்கையுடன் ஒப்பிட்டால் அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட செல்வாவின் கோரிக்கைகள் அதிகார நோக்கில் குறைந்தவையே! ஆனால் ஆகக் குறைந்த கோரிக்கைகள் கூட சிங்கள வெறியால் கிழித்து வீசப்பட்ட போதுதான் வேறு தெரிவுகளின்றி தனிநாடு என்னும் நிலைப்பாட்டை நோக்கி தமிழ்த் தேசிய அரசியல் நகர நேர்ந்தது. ஆனால் அதன் பின்னர் கூட ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோரும் தமிழ்த் தரப்பொன்றும் இருந்தது.

விடுதலைப் புலிகள் ஒரு பக்கத்தில் போராடிக் கொண்டிருக்கும் போது கூட, மகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டு, அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையுடன் ஒரு தரப்பு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தரப்பினர் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் இணைந்தும் செயற்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தன் போது கொழும்புடன் கைகோர்த்திருந்த தமிழ் தரப்பொன்றும் இருந்தது. ஆனால் அந்த தரப்பிடமாவது ஒரு கணிசமான அளவு அதிகாரங்களை ஒப்படைத்திருக்க முடியும் ஆனால் அதற்கும் சிங்கள ஆளும் வர்க்கம் தயாராக இருக்கவில்லை. அவர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியது.

இதில் சந்திரிக்கா குமாரதுங்க விதிவிலக்கானவராக காண்பிக்கப்பட்ட போதிலும் கூட, அவரது முயற்சியை அப்போது ரணில் தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இதுவும் கூட சிங்கள இன மேலாத்திக்கத்தின் இன்னொரு முகம்தான். ஒரு சிங்கள தரப்பு தங்களை தாரளமானவர்களாக காண்பிக்க முயற்சிக்கும் போது, பிறிதொரு சிங்களத் தரப்பு அதனை குழப்பி தோற்கடிக்கும். இதுவே கடந்த எழுபது வருடங்களாக இத்தீவில் அரங்கேறிவரும் சிங்கள அரசியலாகும். இதில் சதாரண சிங்கள மக்களை நாம் குற்றவாளிகளாக காணமுடியாது. ஆனால் அவர்கள் இவ்வாறானதொரு அரசியல் பாதையில்தான் கடந்த எழுபது வருடங்களாக வழிடத்தப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான அநீதிகளும் அவர்களின் பெயராலேயே நடந்தேறியிருக்கின்றன.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கோரிக்கையும் மேலாதிக்க நோக்கம் கொண்டதல்ல. ஆனால் தமிழ் மக்களின் ஆகக் குறைந்த கோரிக்கைகள் கூட நிராகரிக்கப்பட்;ட போதுதான் தனிநாடு ஒன்றை நோக்கிச் சிந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழ் தலைவர்கள் தள்ளப்பட்டனர். இன்று தமிழ் மக்களின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சம்பந்தர் அந்தத் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத ஒருவர். ஆனால் அப்படியான ஒருவரது கோரிக்கையைக் கூட இன்று சிங்களம் ஒருமித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையிலிருக்கிறதா? சம்பந்தன் அளவிற்கு இணங்கிச் செல்லக் கூடிய ஒரு தலைவர் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இனிக் கிடைக்கப் போவதில்லை.

ஆனால் அவ்வாறான ஒருவருடன் கூட, இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பதிலாக எவ்வாறு அவரை மேலும் பலவீனப்படுத்தலாம் என்பதிலேயே சிங்கள ஆளும் வர்க்கம் தொழிற்பட்டுவருகிறது. ஒரு புறம் அரசியல் தீர்வில் நாட்டம் உள்ளவர்கள் போல் காண்பித்துக் கொண்டு, இன்னொரு புறமாக பௌத்த மதபீடத்தை களத்தில் இறக்கி நிலைமைகளை மேலும் தங்களுக்குச் சாதகமாக கையாள முற்படுகின்றனர். சிங்கள பௌத்த மதபீடத்தை, சிங்கள கடும் போக்கு வாதிகள் ஆகியோரை புறக்கணித்து, ஏன் சிங்கள தலைவர்களால் தற்துனிபுடன் செயற்பட முடியாமல் இருக்கிறது? ஏனென்றால் தமிழ் மக்களை, சிங்கள மக்களுக்கு சமதையானதொரு மக்கள் கூட்டமாகக் கருதுவதற்கான உளப்பாங்கு அடிப்படையிலேயே சிங்கள தலைவர்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் தங்களின் ஆளுகையின் கீழ் இருக்க வேண்டியவர்கள் என்பதே அவர்களது அப்படையான புரிதலாகும்.

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை இனவாதமாக பார்ப்பவர்கள் முதலில் அந்த இனவாதத்திற்கான வேர் எங்குள்ளது என்பதை உற்று நோக்க வேண்டும். இன்று வடக்கு முலமைச்சர் விக்கினேஸ்வரனை சிலர் இனவாதியாக காண்பிக்க முற்படுகின்றனர். அப்படியென்ன விக்கினேஸ்வரன் கூறிவிட்டார்? தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது ஒரு இனப்படுகொலை என்று கூறினார்.

தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் அவர்களுக்கென்று ஒரு தனியான வரலாற்று வாழ்விடம் உண்டு. அங்கு அவர்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அரசியல் தீர்வு முயற்சிகள் அமைந்திருக்க வேண்டும். இதனைக் கூறுவதால் அவர் இனவாதியா? தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசுவது இனவாதம் என்றால் அந்த இனவாதத்தில் ஒரு தவறும் இல்லை. தவிர இப்பத்தியாளரின் பார்வையில் இனவாதம் தவறான ஒன்றல்ல மாறாக இன வெறிதான் தவறானது.

அந்த வகையில் இப்பத்தி சிங்கள இனவாதத்தையும் தவறான ஒன்றாக காணவில்லை. ஒவ்வொரு இனத்திற்கும் தனது இனத்தின் சார்பில் சிந்திக்கும், அதற்காக செயற்படும் உரிமையுண்டு. அந்த கோணத்தில் நோக்கினால் இனவாத அரசியல் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அது இனவெறியாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பத்தி தமிழ் இனவாதத்தை சரியான ஒன்றாகவே கருதுகிறது. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. நாங்கள் இனவாதத்தை கடந்து சிந்திக்கின்றோம் என்று சொல்லுபவுர்கள்தான் சிக்கலானவர்கள். இன்று இலங்கையில் இனவாதத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை. மக்களும் இல்லை. சாதி ரீதியாக, மத ர்Pதியாக பிளவுகள் இருக்கின்ற போதிலும் கூட, தமிழ் மக்கள் தேர்தல்களின் போது, தமிழ் இனமாகவே சிந்திக்கின்றனர். அதே போன்றுதான் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சிந்திக்கின்றனர். ஆனால் இந்தப் போக்கை உடைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

விடுதலைப் புலிகள் என்னும் காப்பரன் இல்லாமல் போன பின்னர், தமிழ் சமூகத்தில் சாதிய உரிமை பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. வன்னியில் வாழும் மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றவாறான குரல்களையும் கேட்க முடிகின்றது. இவ்வாறானவர்கள் எல்லாம் இதற்கு முன்னர் எங்கிருந்தனர்? அதே போன்று யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்க கட்சிகளை நோக்கித் தள்ளுகின்ற முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இவற்றை தடுப்பதற்கு தமிழ் தலைவர்களிடம் இருக்கின்ற ஒரே ஆயுதம் தமிழ் இனவாதம்தான். தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கும் ஓரணியாக சிந்திக்க வைப்பதற்கும் தமிழ் இனவாதம் கட்டாயமானது ஆனால் அது ஏனைய இனங்களுக்கு எதிரான வெறியாக மாறிவிடக் கூடாது. ஏனெனில் இனவாhதம் சரியானது - இனவெறிதான் தவறானது. சிங்களவர்களிடம் இருப்பது இனவெறி. அதன் காரணமாகவே இந்தத் தீவின் தேசிய முரண்பாட்டை இன்றுவரை ஒரு தீர்வை நோக்கி கொண்டு செல்ல முடியாமலிருக்கிறது.