Apr 30

ஓவியங்களால் கிடைத்த பெருமை!

 துனிஷியாவின் கடற்பகுதியில் இருக்கும் ஜெர்பா தீவில் உள்ள மிகச் சிறிய கிராமம் எரியாட். ஒருகாலத்தில் கனவுத் தீவாகக் கருதப்பட்ட இந்தத் தீவு, தற்போது துனிஷியாவின் சுற்றுலாப் பட்டியலில் இல்லை.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாக இருந்து வந்தாலும் மிகக் குறைவான வெளிநாட்டினரே சுற்றிப் பார்க்க வந்துகொண்டிருந்தனர். அதனால் பெரிய அளவில் கடைகளோ, தங்கும் விடுதிகளோ இல்லை.

பெரிதாக உலகத்தின் பார்வைக்கு வராத இந்தக் கிராமம் சமீபகாலமாகச் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் அந்தக் கிராமத்து வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்தான்!
2014-ம் ஆண்டு மெஹ்டி பென் சீய்க் என்ற பாரசீக ஓவியர், 30 நாடுகளிலிருந்து நூறு ஓவியர்களை ஜெர்பாவுக்கு வரவழைத்தார்.கிராமங்களில் உள்ள வீட்டுச் சுவர்களின் மீது நிரந்தரமான ஓவியங்களைத் தீட்ட வைத்தார்.

“அரசாங்கத்திடம் அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் வீட்டின் உரிமையாளர்களிடம் அனுமதி வாங்குவதற்குக் கஷ்டப்பட்டேன். இந்தக் கிராமத்தில் மட்டும் 300 சுவர் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறோம். சாதாரணமான ஒரு கிராமம், இன்று மிகப் பெரிய திறந்தவெளி ஓவிய அருங்காட்சியகமாக மாறிவிட்டது.

இந்த ஓவியங்களைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். உணவு விடுதிகளும் உணவகங்களும் பெருகிவிட்டன. வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது” என்கிறார் மெஹ்டி பென் சீய்க்.