Apr 30

சிவராம் கொலை குறித்து விசாரணயை அரசு இப்போதாவது நடத்த வேண்டும்: முதலமைச்சர்

"படுகொலை செய்யப்பட்ட தராகிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் உரிய விசாரணைகளை இப்பொழுதாவது மேற்கொள்ள வேண்டும்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருக்கின்றார்.
 
தமிழ் ஊடகவியலாளர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

"படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு கிழக்கினைச் சேர்ந்த ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் முன்னெடுக்கின்ற இந் நிகழ்வில் என்னை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுமாறு அழைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.

உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்த ஒரு பெரும் பணியை கைக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் இறந்த தினத்தில் அவர் பற்றி சிந்திக்காமல் இருப்பது இறை நிந்தனைக்கு ஒப்பானது. அந்த வகையில் இந் நிகழ்வில் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்த போது மற்றைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்துவிட்டு எதுவித மறுப்பும் இன்றி எனது சம்மதத்தை தெரிவித்திருந்தேன். எனினும் ஒழுங்கு செய்ய சற்றுத் தாமதமாகிவிட்டது.

இலங்கைத் தமிழினத்தின் சிறந்த ஒரு ஊடகவியலாளராகத் திகழ்ந்த தராகி டி. சிவராம் அவர்கள் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்களிடத்திலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

தராகி என்றும் டி.சிவராம் என்றும் ளு.மு என்றும் நன்கு அறியப்பட்ட திரு.தர்மரட்ணம் சிவராம் அவர்கள் மிகத்துணிச்சலானதொரு ஊடகவியலாளர். அவரின் எழுத்துக்கள் கூடுதலாக ஆய்வு முறையான ஊடகவியலாகவே (ஐnஎநளவபையவiஎந துழரசயெடளைஅ) அமைந்தன. எவ்வகையான நெருக்கடிச் சூழ்நிலைகளிலும் எதற்கும் அஞ்சாது துணிச்சலாக செய்திகளையும் அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தவர்.

அவருடைய ஊடகப் பணியில் இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக சிறந்த ஒரு ஊடகவியலாளராகச் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளி உலகிற்கு தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஊடகப் பணியினூடாக தமது எழுத்தாற்றல் மூலம் முழுப் பங்களிப்பையும் அவர் ஆற்றி வந்தார்.  ஊடகவியல்;துறையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடாது தமிழ் அரசியல், இலக்கியம், இலங்கையின் சிக்கலான வரலாறு ஆகியவை தொடர்பிலும் இவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன.

சரித்திரவியலாளர்கள், அரசியல் அறிவியலாளர்கள், ஆதிமக்கள் வளர்ச்சி பற்றிய அறிவியலாளர்கள் (யுவொசழிழடழபளைவள), சட்டவல்லுனர்கள், புவியியலாளர்கள் ஆகிய அனைத்துத் துறை விற்பன்னர்களுடனும் தர்க்க ரீதியான கருத்துப் பரிமாற்றங்களை கைக் கொண்டிருந்தமையால் உள்நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரின் அரசியல் ஆய்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1990களில் பல அரசாங்கங்களும், மனித உரிமைகள் நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும், இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சிவராமின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக முன்வந்தனர். இதனால் அவர் ஐரோப்பிய, ஆசிய, வடஅமெரிக்க நாடுகள் பலவற்றிற்கு  இராஜதந்திரக் குழுக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்காக பல முறை சென்று வந்தார்.

அவரின் இறப்பு ஏற்பட்ட தினத்தில்கூட ஐப்பானிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக செல்ல இருந்தார் என்பது பின்னர் அறியக் கிடைத்தது. இவரின் கொல்லப்பட்ட பூத உடல் தலையில் பலத்த காயங்களுடன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கும் வைத்தியசாலைக்கும் இடையில் புதர்கள் உள்ள ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்ற பணியில் தன்னை நீண்டகாலமாகவே இணைத்துக் கொண்ட திரு.சிவராம் தனது செயலில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்ததுடன் சிங்களப் பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார்.

சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து தமிழர்களுக்கான உரிமைகளை எந்தப் பேச்சுவார்த்தையின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாது என்ற உண்மையினை உலகுக்கு எடுத்துரைத்து வந்தார். இன்றும் அவ்வாறான சிந்தனையில் நாம் இருந்தாலும் ஆயுதத்தை ஒதுக்கிவைத்து ஆளுமைமிக்க நெருக்குதல்கள் மூலம் நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற எண்ணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

தராகி அவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் நவீன தகவல் தொழில்நுட்பத்திலும் தொடர்பாடலிலும் கூடுதலான அறிவை வளர்த்துக் கொண்டு எமது மக்களுக்கெதிரான அரசின் செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துக்கூறுவதற்கு பின்நிற்கக்கூடாது என்ற கொள்கையில் இறுக்கமாக இருந்தார்.

அவரின் எழுத்தாற்றல் பக்கச்சார்புகள் இல்லாமல் தனது விமர்சனங்களை உண்மையாகவும் நேர்மையாகவும் ஊடகவாயிலாக வெளிப்படுத்துகின்ற சிறந்த பண்பை கொண்டிருந்;தமையால் தராகி அவர்களின் கட்டுரைகளை படிப்பதற்கென்றே 1990களில் விசேட வாசகர் வட்டம் மக்கள் மத்தியில் உருவாகியிருந்தமை அவரின் எழுத்தாற்றலுக்கு சான்றுபகர்வன.

இந்த இடத்தில் நான் தற்போதைய இளைய பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு ஓர் பணிவான வேண்டுதலை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள். நடுநிலைநின்று எழுதுங்கள். ஆரம்பத்தில் உங்களை பலர் விமர்சிப்பார்கள். ஆனால் நாளடைவில் நீங்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளராக மக்களால் இனம் காணப்படுவீர்கள் அதற்காக உழையுங்கள் என்பதே எனது வேண்டுகோள். பல பத்திரிகையாளர்களுடன் எனக்கு நட்பு உண்டு. அன்றும் இருந்தது; அரசியலுக்கு வந்த பின்னரும் இருந்தது. இருந்தும் வருகின்றது. அவர்களுள் சிலரைப் பரிதாபத்திற்கு உரியவர்களாக நான் அடையாளம் காண்கின்றேன்.

ஒருவர் நல்லவர், கெட்டவர் என்று அவர்கள் அடையாளம் காண்பது தமக்கு அவர் எந்தளவு குடிக்க, வெறிக்க, சாப்பிட கையளித்தார் என்பதை வைத்தே என்பதைக் கண்டேன்! இன்னார் நாம் போனால் இவற்றையெல்லாம் தருவார். ஆகவே அவர் சிறந்த மனிதர் என்பார்கள். அந்த மனிதர் தம்மை விலைபேசுகின்றார் என்பதை அறியாமலேயே என்னிடம் இதைக் கூறுவார்கள்.

அடக்கு முறை என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல தொழிலாளர்கள் மீது தொழில் வழங்குனரின் அடக்குமுறைகள், வர்க்க அடக்குமுறைகள், இன அடக்கு முறைகள், மத அடக்குமுறைகள் என அடக்குமுறைகள் பல வடிவங்களில் நலிவடைந்த மக்கள் மீது வலிமை மிக்கவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. எனினும் அடக்கு முறைகள் அதிகரிக்க அதிகரிக்க வீறுகொண்டெழுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் காலம் சென்றாவது தமது கோரிக்கைகளில் கொள்கைகளில் வெற்றி பெற்றிருப்பதை சரித்திர வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம்.

தராகி அவரின் எழுத்தாற்றல் மூலம் அப்போதைய அரசாங்கங்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்குத் தொடர்பான சக்திகளும் அவரை நெருக்கடிகளுக்குள் நுழைக்க பலவிதங்களிலும் முயற்சித்து வந்தனர்.  

அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென நண்பர்களும் ஊடகவியலாளர்களும் இன்னும் பலரும் அவருக்குத் தெரிவித்திருந்த போதும் உயிருக்குப் பயந்து தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. “இங்கு சாகாமல் நான் எங்கு சாவேன்” என்று அவர் தம் நண்பர்களிடம் பலமுறை கேட்டதுண்டு. தனி ஒரு தராகியை கொல்வதன் மூலம் அவரின் கொள்கைகளை அழித்துவிடலாம் அல்லது அவ் வழியில் ஈடுபடுகின்ற ஏனைய அங்கத்தவர்களை பீதியடையச் செய்து அடக்கிவிடலாம் என்று எண்ணுவது மிலேச்சத்தனமானது என்றார்.

எமது நாட்டில் பல பத்திரிகையாளர்கள் அரச மிரட்டல்கள், அரச வன்முறை போன்றவற்றிற்குப் பலியாகி வந்துள்ளனர். தமிழ் ஊடகவியலாளர்கள் என்று பார்த்தால் நடராஜா அற்புதராஜா, பாலநடராஜஐயர், ஐயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், கே.ஸ்.இராஜா, ரேலங்கி செல்வராஜா, ஐ.சண்முகலிங்கம், எஸ்.சிவமகாராஜா, சுப்பிரமணியம் சுஜிந்தராஜன் போன்ற பலருடன் தராகியின் பெயரும் இணைக்கப்பட வேண்டி வந்தது எமது துரதிர்~;டமே.  

தராகி அவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, நல்ல மனம் கொண்ட நேர் சிந்தனையுடைய பல சிங்கள மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது. அவரது அன்பு மனைவி, பிள்ளைகள் பெற்ற துன்ப துயரங்களுக்கு யார்தான் பதில்கூறப் போகின்றார்கள்? எனினும் அவரின் விடாப்பிடியான கொள்கைகள் எமக்கெல்லாம் கலங்கரை விளக்கமாக விளங்கக் கூடும். அவரின் வாழ்க்கையில் இருந்து பின்வருவனவற்றை நாம் படித்துக் கொள்ளலாம்.

1.    ஆய்வு முறை ஊடகவியல் எம்மை அரசியல், சமூக வானில் நடைபெற இருப்பவற்றை ஏற்கனவே ஆருடம் கூற வழிவகுக்கின்றது. பல எதிர்கால நடப்புக்களை அவர் ஏற்கனவே நடக்கும் என கூறியிருந்தார்.

2.    கிணற்றுத்தவளைகள் போல் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு தேசிய, சர்வதேச அளவிலான விடயங்களை மறந்து விடாது இருப்பது. தற்போது ஜெனீவாக் கூட்டத்தின் பிரேரணைகளுக்குப் பிறகு சர்வதேச செய்திகளுடனும் பரீட்சயப்பட்டு இருப்பது ஊடகவியளர்களுக்கு முக்கியமாகின்றது. தராகி அவ்வாறே செயல்பட்டார். வெளியுலக நடப்புக்களை அறிந்து அவற்றின் நன்மை தீமைகளை எமக்கு காலத்திற்குக் காலம் தந்துதவினார்.

3.    நடப்பவற்றை அவர் மனித உரிமைகள் கண்டுகொண்டு பார்த்து தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
4.    நவீன முறைகளை ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். அதனுடனே ஊடகவியலாளர்கள் சுயதிருத்தக் கோவைகளை இயற்றி தம்மைத் தாமே நல்வழிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

காலனுக்கு இரையாக்கப்பட்ட தராகிக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் உரிய விசாரணைகளை இப்பொழுதாவது மேற்கொள்ள வேண்டும் என்று கூறி என்னை அழைத்தமைக்கு மீண்டும் நன்றி கூறி அன்னாரின் ஆத்ம சாந்திக்காக மனமாரப் பிரார்த்தித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்."