Apr 29

ஏறாவூர் குப்பை மேடு சுற்றுலா தகவல் மையமாக மாறியது

ஏறாவூர்  நகரின் குப்பைகள்  கொட்டப்பட்டு வந்த இடத்தில் கிழக்கு மாகாண சுற்றுலா தகவல் மையத்தினை அமைக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்.


இதனடிப்படையில்   தற்போது   மட்டக்களப்பு மாவட்டத்தின் குப்பைகள் கொடுவாமடு  திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் நிலையில்  தற்போது ஏறாவூர் குப்பை மேட்டை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் கிழக்கு முதலமைச்சர் அங்கு சுற்றுலா தகவல் மையத்தினை அமைக்க தீர்மானித்துள்ளார்.

 

தற்போது அங்கு கிரவல் மண் இட்டு செப்பனிடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

 

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால்  உருவாக்கப்பட்டு தற்போது  அதிக மக்களின் கவனத்தை ஈர்த்து ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரை பூங்காவுக்கு அருகில் இந்த மையம் உருவாக்கப்படுவதன் ஊடாக இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

சுற்றுலா மையம் அமைப்பது தொடர்பில்  சுற்றுலாத்துறை அமைச்சின அதிகாரிகளும் இந்த இடத்தை பார்வையிட்டதுடன் வாவிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம் சிறந்த  சுற்றுலாத்தலமாக அபிவிருத்தியடையும் என அவர்கள் குறிப்பிட்டனர்,

 

இதேவேளை தற்போது செப்பனிடப்பட்டு வரும் குப்பை மேட்டினை பரர்ப்பதற்காக கிழக்கு முதலமைச்சர் அதிகாரிகள் சகிதம் அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது