Apr 29

’பாகுபலி 2’ அப்டேட்: 100 கோடியைத் தாண்டியது முதல் நாள் வசூல்

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியான 'பாகுபலி 2', முதல் நாள் வசூலில் 100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ராஜராஜன் வெளியிட்டுள்ளார்.

விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'. இந்தியளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைக்கும் என்று திரையுலக நிபுணர்கள் கணித்திருந்தனர்.

அதன்படியே 'பாகுபலி 2' படத்தின் வசூல் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 100 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தில் முதல் நாளில் 11 கோடி வசூல் செய்திருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்குடையேயான பணப்பிரச்சினைக் காரணமாக காலை 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அக்காட்சிகள் திரையிடப்பட்டிருந்தால், கண்டிப்பாக தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் என்று தெரிவித்தார்கள்.

2017ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 'பைரவா' படத்துக்குப் பிறகு 'பாகுபலி 2' இடம்பெற்றுள்ளது. சிறுஅளவிலேயே தொகை குறைந்துள்ளது என்று தெரிவித்தார்கள். மேலும், மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் கிடைத்திருக்கும் வரவேற்பு ஆகியவற்றைக் காணும் போது கண்டிப்பாக முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தும் என தெரிவித்தார்கள்.

மேலும் இந்தியளவில் ஆந்திரா - தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து 45 கோடி, இந்தி - 34 கோடி, தமிழ்நாடு - 13 கோடி, கர்நாடகா - 9 கோடி, கேரளா - 5 கோடி என மொத்தமாக 106 கோடி வசூல் செய்திருக்கும் என தெரிவித்துள்ளார்கள். அதிகாரப்பூர்வ கணக்குகள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தி திரையுலகின் திரையுலக வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "'பாகுபலி 2' முதல் நாளில் பிரம்மாண்டமாக வசூல் செய்திருக்கிறது. முந்தைய அனைத்து சாதனைகளை முறியடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.