Apr 29

தமிழக அரசை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக அரசின் நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு, சிபிஐ வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளை பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், இந்த ரெய்டுகளில் கூட ஆளும் மத்திய பாஜக அரசு பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது அறிக்கையில்

”ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக் குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

ஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” - “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்,

மேலும் அவரது அறிக்கையில்,

திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பா.ஜ.க.வை வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் தயவு தாட்சயன்மின்றி ஊழல் ஒழிப்பு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்

இது போன்ற விவகாரங்களில் பிரதமர் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள ஸ்டாலின் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் “வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ” போன்ற அமைப்புகள் அரசியலுக்காக பா.ஜ.க.வால் பயன்படுத்தப்படுவதை தடுத்து, தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"