Apr 28

ஐ.பி.எல் திருவிழா; புனேயை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரின் 30ஆவது  லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. 

முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களை எடுத்தது. அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ஓட்டங்களை எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ஓட்டங்களை எடுத்தனர்.

பின்னர் 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நரேன் 11 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் காம்பீர் உடன் உத்தப்பா இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 

புனே வீரர்களின் பந்துவீச்சுகளை உத்தப்பா பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். அவருக்கு காம்பீரும் உறுதுணையாக ஓட்டங்களைச் சேர்த்தார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தது. 

அதிரடியாக விளையாடிய உத்தப்பா 47 பந்துகளில் 87 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து காம்பீரும் 62 ஓட்டங்களில் அரங்கு திரும்பினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோ(6), மணிஷ் பாண்டே(0) ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. ஹட்ரிக் வெற்றி பெற்ற புனே அணி தனது 4ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. 

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய உத்தப்பா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.