Apr 28

தினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயார்: நாஞ்சில் சம்பத் பேட்டி

டிடிவி தினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அடையாறில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எங்கள் பக்கம் 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்த கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் புகைப்படங்களை அகற்றியிருப்பது சரித்திர அநீதி. கடந்த 33 ஆண்டு காலம் சுகங்களுக்கு அடிமைப்படாத சூரியப் பந்தாய், ஆசாபாசங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எம்.ஜி.ஆருக்குப் பிறகு இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கான சுமையை முதல்வர் ஜெயலலிதா தனது தோளில் ஏற்றுக் கொண்டபோது அந்தச் சுமையை பகிர்ந்து கொண்டவர் சசிகலா.

விமர்சனங்கள் ஆயிரம் வைக்கலாம். ஆனால் சசிகலா அந்தக் கடமையை வெற்றிகரமாக செய்தார். முதல்வர் ஜெயலலிதாவே, சசிகலா எனக்கு இன்னொரு தாய் என்று ஒரு பேட்டியில் சொன்னார், சசிகலாவால் பதவி பெற்றவர்கள்தான் அவரது படத்தை கீழே இறக்கியுள்ளனர். 123 சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்தவர் டிடிவி.தினகரன்தான்.

டிடிவி.தினகரனிடம் ஏற்கெனவே 37 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்னும் விசாரிக்க என்ன இருக்கிறது? இருப்பினும், டெல்லி போலீசாரின் விசாரணைக்கு இடையூறாக இருக்கமாட்டோம். டிடிவி தினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

அதிமுக பொதுச் செயலாளரின் கண் அசைவு இல்லாமல், அவரது கையெழுத்து இல்லாமல் இந்த கட்சியில் எதையும் செய்ய முடியாது. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. அவரை அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. அவரிடம் நடத்தப்படும் விசாரணை ஒரு நாடகம். டெல்லிதான் இந்த நாடகத்தை நடத்துகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மகிழ்ச்சிதான்'' என்றார் நாஞ்சில் சம்பத்.