Apr 27

நாடு கடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் விழா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடுகடந்த அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் சனிக்கிழமை ஏப்ரல் 22ந் திகதி 2017 அன்று  மிகச்சிறப்பான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. 'தந்தை செல்வா ஞாபகார்த்த விருது' திரு ஈழவேந்தன் அவர்களுக்கும், 'மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த விருது' கலாநிதி சேவியர் பெர்னான்டோ அவர்களுக்கும், 'நெல்சன் மண்டேலா ஞாபகார்த்த விருது' தென்னாபிரிக்காவில் வாழும் மனித உரிமைச் செயல்பாட்டானரான யஸ்மின் லூயில்ஸ் ஸூகா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.  சிறப்பு விருந்தினர்களாக தந்தை செல்வாவின் பேர்த்தியான மல்லிகா வில்ஸன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு உரையாளராக அமெரிக்காவிலிருந்து பிரபல மனித உரிமைகள் சட்ட நிபுணர் ஹெதர் ரயல் அவர்களும் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதியமைச்சராக பணியாற்றும் நிமால் வினாயகமூர்த்தியின் வரவேற்புரையுடன் விருந்துபசார நிகழ்வு ஆரம்பமானது. ஹெதர் ரயல் தனது உரையில் இன்றைய நிலையில் அரசியல் சார்ந்து தமிழ் மக்கள் கவனிக்கவேண்டிய முன்னெடுப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தந்தை செல்வாவின் பேர்த்தியாகிய மல்லிகா வில்ஸன் தனது உரையில்  நாடுகடந்த அரசாங்கத்தினால் தமக்கு அளிக்கப்பட்ட கௌரவம் குறித்து குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். தமிழ்ச் சமூகத்திற்கு தந்தை செல்வாவினது பங்காற்றல் குறித்து அவர் உரை அமைந்திருந்தது. ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர்  ஜாக் மாக்லெரன் தனது உரையில் நாடுகடந்த அரசாங்கத்தின் அரசியல் பணிகளின் உன்னதங்களைக் குறிப்பிட்டார்.



கனடிய பாராளுமன்ற உறுப்பினரான பொப் ஸரோயா தமிழ்ச்மூகத்திற்கு நாடுகடந்த அரசாங்கம் செய்துவரும் சேவையைப் பாராட்டினார். மாமனிதர் துரைாஜா விருது பெற்ற கலாநிதி சேவியர் பெர்னான்டோ தனது உரையில் தமிழ் விழுமியங்கள் காணவேண்டிய உச்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். பேராசிரியர் வணக்கத்துக்குரிய பிதா ஜோசப் சந்திரகாந்தன் தமிழ் மக்களுக்கு நாடுகடந்த அரசாங்கம் ஆற்றியுள்ள சேவைகளை விபரித்தார். கனடா மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பனரான கரி ஆனந்தசங்கரி தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள் நீதி விசாரணைகளைக் கோரும் பயணத்தில் ஒரு முன்னோடியாக நின்று நாடுகடந்த அரசாங்கமும் இணைந்து பயணிப்பதைக் குறிப்பிட்டார். கவுன்சிலர் நீதன் ஷான் 2009இல் காலத்தின் கட்டாயமாக உருவான நாடுகடந்த அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைப் பயணத்தை விதந்துரைத்தார்.



நாடுகடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்கும் சிறப்புக் கலை நிகழ்ச்சிகளும், உரைகளும் மேடையில் ஆற்றப்பட்டன. குறிப்பாக பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான கனடியர்களும் கூடவே வெளிநாட்டிருந்து வரும் விருந்தினர்களும் இணைந்து கலந்து கொண்ட இந்த விருந்துபசார நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயரிய நோக்கங்களை சிறப்பாக விளக்குவாக அமைந்திருந்தது என கலந்து கொண்ட அனைவரும் ஏகமனதாகத் தெரிவித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.