Apr 27

testவானுயர் கட்டட கிறேனில் அகப்பட்ட பெண் மீட்பு

ரொரன்டோவிலுள்ள வானுயர்ந்த கட்டம் ஒன்றில் கட்டுமாணப் பணியில் ஈடுபட்டிருந்த கிறேனின் கேபிள் மூலமாக ஏறி உச்சத்தில் அகப்பட்ட பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தீயணைப்புப் படைப்பிரிவினரால் இவர் மீட்கப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது குறிப்பிட்ட பெண்ணை மீட்பதற்கு தீயணைப்புப் படைப்பிரிவினர் சுமார் ஐந்து மணி நேரம் போராட வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருந்தபோதிலும், குறிப்பிட்ட பெண்ணின் பெயரையோ அல்லது எதற்காக அவர் மேலே ஏறினார் என்ற தகவலையே பொலிஸார் தெரிவிக்கவில்லை. 

ரொரன்டோ Wellesley Street பகுதியில் கட்டுமாணப்பணியில் பயன்படுத்தப்படும் கிரேனின் கேபிள் மூலமாகவே குறிப்பிட்ட பெண் உச்சத்துக்கு ஏறிச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 20 வயதான இந்தப் பெண் மீட்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மீது 6 குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறிப்பிட்ட பெண்ணை மீட்பதற்காக தாம் மேற்கொண்ட நடவடிக்கை குறிப்பிடத்தக்க வெற்றிகரமான ஒரு செயற்பாடு என வர்ணித்த ரொரன்டோ தீயணைப்புப் படைப்பிரிவின் தலைவர் மத்யூ பெக், "இவ்வாறான நடவடிக்கைகளுக்காக நாம் பயிற்றப்பட்டுள்ளோம். ஆனால், இது போன்ற ஒரு சம்பவத்தை இதற்கு முன்னர் நாம் எதிர்கொண்டிருக்கவில்லை" என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 




அதிகாலை 3.10 மணியளவில் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் அவசரப் பிரிவு, குறிப்பிட்ட பெண்ணுடன் பேசுவதற்கு முயன்றது. காலை 6.00 மணியளவில் மீட்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது. 8.00 மணியளவில் தீயணைப்புப் படையின் கிறேன் மூலம் அனுபப்பட்ட ஒருவருடன் குறிப்பிட்ட பெண் இணைக்கப்பட்டு கீழே இறக்கப்பட்டனர். கீழே கொண்டுவரப்பட்ட பின்னர் மருத்துவபரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.