Apr 27

இதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்; ஆனந்தசங்கரி

மற்றவர்களுக்காக வேஷம் போடாது வேற்றுமைகளைக் களைந்து இதய சுத்தியோடு ஒன்றிணைந்து செயற்படுவதே தந்தை செல்வாவிற்கு செய்யும் மரியாதையாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தந்தை செல்வநாயகத்தின் 40 ஆண்டு நினைவு தினமான நேற்று தந்தை செல்வா சதுர்க்கத்தில் மலர் அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா பெரும் சாதனை செய்த சாதனையாளன் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து சென்ற கட்சிகள் எல்லாவற்றையும் முதல் தடவையாக மட்டுமன்றி இறுதியாகவும் சேர்த்து வைத்த பெருமை அவரையே சாரும்.

அவருடைய ஞாபகர்த்தமாக ஏதாவது செய்யவேண்டுமானால் எங்களுடைய வேற்றுமையை மறந்து அனைவரும் ஒன்று சேரவேண்டும்.

மற்றவர்களுக்காக வேஷம் போட்டுக் காட்டாது இதய சுத்தியோடு தந்தை செல்வாவை தலைவராக ஏற்று அவர் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நாங்கள் செயற்பட்டு எங்களுடைய பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய புனிதமான கடமை எங்களுக்கு உண்டு.

ஆகவே பிரிந்துள்ளவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து இதய சுத்தியோடு செயற்பட இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்