Oct 30

சிறிலங்கா மீதான ஐ.நா. பூகோள சுற்று ஆய்வு – (யூ.பி.ஆர்) ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்வு என்றால் என்ன, எப்படியாக, யார் இதை முன்னின்று செய்கிறார்கள்? என்பதை முதற்கண் அறிந்திருப்பது மிக அவசியம். 

ஐ.நா. தனது அங்கத்துவ நாடுகளை கண்காணிப்பதற்காக அல்லது மேற்பார்வை செய்வதற்காக மிக நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ள விதிமுறை, பொறி முறைகளுக்குள், மிக புதிதாக உள்ளடக்கப்பட்டதே ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்வு – யூ.பி.ஆர் (Universal Periodic Review – UPR). அதாவது, 2006ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி, ஐ.நா.பொதுச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மனத்திற்கு அமைய, ஐ.நா.மனித உரிமை சபை ஆரபிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2007ம் ஆண்டு யூன் மாதம், ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்விற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகியது. 

இதனது நோக்கம் என்னவாகவுள்ளதென நாம் ஆராய்வோமானால் - ஐ.நா.வின் நூற்று தொண்ணூற்று மூன்று (193) அங்கத்துவ நாடுகளீனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஐ.நா. உடன்படிக்கைகள், வாக்குறுதிகளை நாடுகள்  மதித்து நடைமுறை படுத்துகின்றனவா? எப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளது? சில நாடுகள் அவற்றை மதிக்காத காரணத்தினால், அவ் நாடுகளில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் என்ன நிலையில் உள்ளது? போன்ற விடயங்களை ஆராய்வதற்கான பொறி முறையே யூ.பி.ஆர் என்னும் ஐ.நா.வின் பூகோள சுற்று ஆய்வு, கடந்த ஒரு தசாப்பதங்களிற்கு மேலாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

ஐ.நா.வின் யூ.பி.ஆர், வருடத்தில் மூன்று தடைவை, அதற்கான ‘யூ.பி.ஆர் செயற்குழுவினால்’ கூட்டத் தொடராக நடாத்தப்படுகிறது. இவ் கூட்ட அமர்வில், யூ.பி.ஆருக்கு உட்படுத்தப்படும் ஐ.நா. அங்கத்துவ நாடு - எப்படியாக எவற்றை நடைமுறை படுத்தியுள்ளரர்கள், ஏதற்காக சிலவற்றறை நடைமுறைப்படுத்தவில்லை போன்ற கேள்விகளை, மற்றைய அங்கத்துவம் நாடுகள், அமர்வு வேளையில் வெளிப்படையாக வினாவுவதனுடன், அவ் நாட்டை விமர்ச்சிப்பதும் உண்டு. இவ்வேளையில் யூ.பி.ஆர்க்கு உட்படுத்தப்படும் நாட்டினது நட்பு நாடுகள், அவ் நாடு பற்றி மேலாதிகமாக மிகைப்படுத்தி, ஜனநாயத்தை மதிக்கு ஓர் திறமை படைத்த நாடாக அவ் நாட்டை சித்தரிப்பதும் உண்டு.

யூ.பி.ஆருக்கு ஆக்கப்படும் நாடு, தனது நாடு பற்றிய அறிக்கையை – எதை நடைமுறைப்படுத்துகிறோம், எவற்றை நடைமுறைபடுத்தவுள்ளோம், ஏன் எதற்காக சில விடயங்களை செய்யவில்லை போன்ற ஓர் புரண அறிக்கையை, யூ.பி.ஆர் செயற்குழுவிடம் குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிப்பார்கள் - இதை தேசிய அறிக்கை என்பார்கள். இதேவேளை – ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர்  காரியாலயத்தின் விசேட பிரிவு, தமது அறிக்கையை சமர்பிக்கும் அதே வேளை, குறிப்பிட்ட நாட்டின் வேலை திட்டங்களை முன்னேடுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும், சமூக அமைப்புக்களும் அவ் நாடு பற்றிய குறை குற்றங்களை குறிப்பிட்ட தவணைக்குள் முன்பு சமர்ப்பிப்பார்கள். இதை ஐ.நா. மொழியில் பங்குதாரர்களுடைய அறிக்கை என்பார்கள்.

பங்குதாரர்களுடைய அறிக்கை ஐ.நாவினால் தொகுக்கப்பட்டு, அவ் நாட்டின் மீதான யூ.பி.ஆருக்கு பங்களிப்பபை செய்துள்ள அமைப்புக்களின் பெயர்களுடன், அவ் அமைப்புக்கள் என்ன விடயங்களை முன் வைக்கிறார்கள் என்பதை சுருக்மாக அறிக்கை ஆக்குவார்கள். தேவை ஏற்படில், அவ் அமைப்புகளது முழு அறிக்கையையும் யூ.பி.ஆர். செயல்முறைக்கான இணையதளத்தில் பார்வையிடலாம்.

இவ் அறிக்கைகளை யாவற்றையும், ஆய்வுக்கு உள்ளாக்கப்படுத்தப்படும் நாட்டுடன், பேச்சுவார்த்தை சமரசம் போன்றவற்றை செய்வதற்காக, ஐ.நா.மனித உரிமை சபையின், நாற்பத்து ஏழு அங்கத்துவ நாடுகளினால், தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளின் பிரதிநிதி குழு ஒன்று நியமிக்கப்படும். இதை ‘மூவர் குழு’ (Troika) என அழைப்பார்கள்.

இதனை தொடர்ந்து ஓர் குறிப்பிட்ட நாள் அன்று, யூ.பி.ஆர் செயற்குழு கூட்டத் தொடரில், ஏறக்குறைய மூன்று, மூன்றரை மணித்தியலங்கள் ஓர் குறிப்பிட்ட நாடு மீதான ஆய்வு பாரீசிலீக்கப்படும். இவ்வேளையில் மற்றைய அங்கத்துவ நாடுகள், தமது சந்தேகங்கள், கவலைகள், அஞ்சங்கள், ஆதங்கங்களை வெளிப்படுத்துவார்கள். இவ் ஆய்வு நடைபெற்று சரியாக நாற்பத்தி எட்டு (48) மணித்தியாலங்களிற்குள் - ‘மூவர் குழு’, மனித உரிமை ஆணையாளரது காரியாலயத்தின் துணையுடன், ஆய்விற்கு உள்ளாக்கப்பட்ட நாட்டுடன் சமரசம் செய்து, ஓர் ஆய்வின் ‘விளைவு அறிக்கையை’ யூ.பி.ஆர் செயற்குழு கூட்டத் தொடரில் சமர்ப்பிப்பார்கள்.

இவ் அறிக்கையில் - ஆய்விற்கு உள்ளாக்கப்பட்ட நாடு, எந்த எந்த நாடுகளின் வினாக்களை வரவேற்றுள்ளது, ஏவற்றை நிராகரித்துள்ளது போன்ற உள்ளடக்கங்களை கொண்டதாக காணப்படும். இவ் அறிக்கை யூ.பி.ஆர் செயற்குழு கூட்டத் தொடரில் ஏற்றுகொள்ளப்பட்டிருந்தாலும், அவ் குறிப்பிட்ட நாடு, இரு வாரத்திற்குள் தமது நிலைபாட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதனை தொடர்ந்து வரும், ஐ.நா.மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், இவ் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, சபையின் ஒப்புதல் பெறப்படும். அவ் வேளையில், ஆய்விற்குள்ளாக்கப்பட்ட நாடு, மீண்டும் தமது கருத்துக்களை முன் வைக்க அனுமதிக்கபடும். அத்துடன் அங்கத்துவ நாடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும், கருத்துக்களை முன் வைக்கலாம்.

இன்றுவரையில் இருபத்தி ஏழு யூ.பி.ஆர் செயற்குழு கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளதுடன், ஐ.நா. அங்கத்துவ நாடுகளிற்கான இரு சுற்றுக்கள், ஆய்வு செய்து முடிந்துள்ள நிலையில், தற்பொழுது நாடுகளிற்கான மூன்றாவது சுற்று இடம்பெறுகிறது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம், இஸ்ரேல் தனது முதலாவது யூ.பி.ஆரை எதிர்கொண்ட வேளையில், இஸ்லாமிய நாடுகளுடன் வேறு சில நாடுகளுமாக, ஐம்பத்தி நாடுகள் இஸ்ரேலிடம் மிகவும் கடுமையான கேள்விகளை தொடுத்து இஸ்ரேலை ஆட்டம் காண வைத்தனர்.

இதன் காரணமாக, 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரேல் தனது இரண்டாவது யூ.பி.ஆர் சுற்றிற்கு ஒத்துழைக்க மறுத்தது. இது ஓர் இஸ்ரேலின் புரட்சிகரமான முடிவாக காணப்பட்ட பொழுதிலும், இறுதியில் ஐ.நா.வின் அளுத்தம் காரணமாக, இஸ்ரேல் மீண்டும்  யூ.பி.ஆர் செயற் திட்டத்தில் கலந்து கொண்ட  வேளையில், ஏழுபத்து நான்கு நாடுகள் இஸ்ரேலிடம் கேள்விகளை தொடுத்து இஸ்ரேலிற்கு பாரீய தொல்லையை கொடுத்தார்கள். இஸ்ரேலிற்கான மூன்றவது சுற்று, அடுத்த வருடம், 2018 ஜனவரியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கான மூன்றாவது சுற்று

இவ் அடிபப்டையில், சிறிலங்கா மீதான யூ.பி.ஆரின் மூன்றாவது சுற்று, அடுத்த நவம்பர் மாதம் 15ம் திகதி ஜெனிவாவில், யூ.பி.ஆர் செயற்குழுவின் 28வது கூட்டத் தொடரில் பரீசிலீக்கபடவுள்ளது.

இதற்கான சிறிலங்காவின் தேசிய அறிக்கை - இருபத்தைந்து (25) பக்கங்களையும், நூற்று நாற்பது (140) பந்திகளையும் கொண்டது வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை சிறிலங்கா பற்றிய ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்து பார்வையை உள்ளடக்கிய அறிக்கையும் - பன்னிரண்டு (12) பக்கங்களையும் எண்பத்து மூன்று (83) பந்திகளையும் உள்ளடக்கியதுடன், அரச சார்பற்ற நிறுவனங்களின், மிகவும் கரசாரமான சிறிலங்கா மீதான - இருபத்து இரண்டு (22) பக்கங்களையும் நூற்று மூன்று (103) பந்திகளையும் உள்ளடக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையின் முக்கிய வியடம் என்னவெனில் - சிறிலங்காவின் யூ.பி.ஆருக்கான மூன்று சுற்றிற்கும், தொடர்ந்து பங்களிப்பு செய்து வரும் ஒரே ஒரு தமிழ் அமைப்பு - பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் – T.C.H.R. என்பதை யூ.பி.ஆருக்கான இணைய தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய மூன்றவது சுற்றிற்கு, பல தமிழ் அமைப்புக்கள் தமது பங்களிப்பை செய்துள்ள பொழுதிலும், அவற்றில் பெரும்பாலானவை கூட்டு அறிக்கைகளாகவே காணப்படுகிறது. தமிழர் மனிதர் உரிமைகள் மையம் தனித்து தமது அறிக்கை சமர்ப்பித்தள்ளது மட்டுமல்லாது, சிறிலங்கா மீதான யூ.பி.ஆரின் முதலாம் இரண்டாம் மூன்றவது சுற்றிலும் தொடர்ச்சியான தமது பங்களிப்பை செய்து வரும் தமிழ் அமைப்பாகும்.

நடைபெறவுள்ள இவ் மூன்றாவது சுற்றிற்கு – ஐ.நா. அங்கத்துவ நாடுகளான, கொரிய குடியரசு (தென் கொரிய), புருண்டி, பொலீவியா ஆகிய மூன்று நாடுகளும் ‘மூவர் குழு’ (Troika) ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுற்றில், எத்தனை நாடுகள், சிறிலங்கா விடயத்தில் கேள்விகள் சந்தேகங்களை வினாவ உள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதலாம், இரண்டாம் சுற்று

சிறிலங்கா பற்றிய முதலாவது சுற்று, 2008ம் ஆண்டு மே மாதம், யூ.பி.ஆர் செயற்குழுவின் 12வது கூட்டத் தொடரில் நடைபெற்றது. அவ்வேளையில் பங்களாதேஷ், கேமரூன், உக்ரைன் ஆகிய நாடுகள் ‘மூவர் குழு’வாக கடமையாற்றியது. அவ்வேளையில், எல்லாமாக ஐம்பத்தி ஆறு (56) அங்கத்துவ நாடுகள் சிறிலங்காவிடம் வினாக்களை கேட்டு மிகவும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

இவ் முதலாவது சுற்றிற்கு கைவிட்டு எண்ணக்கூடிய நான்கு தமிழ் அமைப்புக்கள் மட்டுமே பங்களித்திருந்தனர். ஆவையாவன – தமிழர் மனிதர் உரிமைகள் மையம் பிரான்ஸ், தமிழர் தகவல் மையம் பிரித்தானியா, தமிழ் சங்கம் அமெரிக்கா ஆகியவற்றுடன் தமிழ் நாட்டிலிருந்து மனிதம் என்ற அமைப்பும் அறிக்கைளை சமர்பித்து யூ.பி.ஆரில் பங்களித்திருந்தனர்.

சிறிலங்கா மீதான இரண்டாவது சுற்று, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம், யூ.பி.ஆர் செயற்குழுவின் 18வது கூட்டத் தொடரில் நடைபெற்றது. அவ்வேளையில் - இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய நாடுகள் ‘மூவர் குழு’வாக கடமையாற்றியது.

இவ் இரண்டாவது சுற்றில், சிறிலங்காவிடம் வினாவப்பட்ட அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை தொண்னுற்று எட்டு (98). யூ.பி;ஆர் செயற் குழு கூட்டதொடரில் வினாக்கள் தொடுக்கப்பட்ட ஆகக் கூடிய நாடுகளை பொறுத்த வரையில், இது ஒரு சாதனையாகும். 

நூற்று தொன்னூற்று மூன்று (193) அங்கத்துவ நாடுகள் கொண்ட சபையில் ஏறக்குறைய ஐம்பது வீதமான நாடுகள் கேள்விகளை ஏழுப்பி சிறிலங்காவின் மிக மோசமான மனித உரிமை நிலையை உலகிற்கு உணர்த்தியது. இவ் விதிமுறையை, ஐ.நா.மொழியில், “பெயர் சொல்லி அவமானப்படுத்துதல்” (Naming and shaming) என்பார்கள்

2012ம் ஆண்டின் இரண்டாவது சுற்றிற்கு, தமிழர் மனிதர் உரிமைகள் மையம் பிரான்ஸ், தமிழர் தகவல் மையம் பிரித்தானியா, பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய இளைஞர் அமைப்பு, கனடிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழ் மையம், இன அழிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு, போன்று பல தமிழ் அமைப்புக்கள் கனடா ஐரோப்பா சிறிலங்கா ஆகிய நாடுகளிலிருந்து, அறிக்கைகளை சமர்பித்து யூ.பி.ஆரில் பங்களித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. (முற்றும்)