Apr 27

தமிழ்ப் பகுதிகளில் இன்று பணி நிறுத்தப் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படும் பணி நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் இன்று இந்த பணி நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் நகர பகுதி வெறிச்சோடிக் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதிகளிலும் இதேபோன்ற நிலை காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து வடபகுதிக்கு நடத்தப்படும் பேரூந்து, ரயில் சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.