Apr 27

சென்னைக்கு தினகரனை அழைத்து வந்தது டெல்லி போலீஸ்; மேலும் சிலர் சிக்கலாம்

இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். நேற்று நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் கூடுதல் விசாரணை நடத்த டிடிவி தினகரனை அழைத்து கொண்டு புறப்பட்ட டெல்லி போலீஸார் சென்னை வந்தடைந்தனர். உடன் அவரது நண்பர் மல்லி என்ற மல்லிகார்ஜுனனையும் அழைத்து கொண்டு வந்தனர். சென்னையில் டிடிவி தினகரன், சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின்படி போலீஸார் விசாரணை மேற்கொள்வர். தினகரனின் வழக்கறிஞர் குமார் வீடு மற்றும் தினகரனை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்துவர்.

குறிப்பாக சுகேஷுக்கு பணம் கொடுத்த ஹவாலா கும்பல் குறித்து விசாரணை நடத்தப்படும். இதனால் தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சிக்கலாம் என்று தெரிகிறது. அதன் பின்னர் அங்கிருந்து பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் டிடிவி தினகரனை அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.