Apr 27

சிலந்திப் பண்ணை

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 28 வயது மிங் கு, கடந்த 7 ஆண்டுகளாக ராட்சத சிலந்திகளை வளர்த்துவருகிறார். இவரது வீட்டில் தற்போது 1,500 சிலந்திகள் இருக்கின்றன. 

‘‘ஒருநாள் தோட்டத்தில் மிகப் பெரிய அழகான சிலந்தியைக் கண்டேன். விதவிதமாகப் படங்கள் எடுத்தேன். ஏனோ அந்த 8 கால் பூச்சி என்னை வசீகரித்தது. அதனை வளர்க்க விரும்பினேன். என் பெற்றோரிடம் சொன்னபோது அதிர்ந்து போனார்கள். என் ஆசையை ஓரமாக வைத்துவிட்டு, சிலந்திகளைப் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தேன்.

என் ஆர்வத்தைக் கண்ட பெற்றோர், வீட்டில் சிலந்திகளை வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். விதவிதமான சிலந்திகளைத் தேடிப் பிடித்து வளர்க்க ஆரம்பித்தேன். சிலந்திகளுக்காக இதுவரை ரூ.35 லட்சம் செலவு செய்திருக்கிறேன். இவற்றுக்காகத் தனியாக ஓர் அறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். 

சிறியதும் பெரியதுமான ஜாடிகளில் வளர்கின்றன. இவற்றில் சில சிலந்திகள் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவை. மற்றவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவை. இன்னும் இரண்டு வகை சிலந்திகள் கிடைத்துவிட்டால் என்னிடம் அத்தனை சிலந்தி வகைகளும் இருக்கும். ஒருநாளைக்குப் பத்து மணி நேரம் இவற்றுக்காகச் செலவிடுகிறேன். 

பெண் சிலந்திகள் கொன்று தின்று விடுவதால் ஆண் சிலந்திகளைத்தான் அடிக்கடி வாங்க வேண்டியிருக்கும். இதுவரை நான் சிலந்திகளை விற்பனை செய்ய நினைத்ததில்லை. ஆனால் அரிய வகை சிலந்திகள் இனப் பெருக்கத்தின் மூலம் அதிகரித்துவிட்டன. 

அதனால் தற்போது சிலந்தி வளர்ப்பைத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். இந்தோனேஷியா மட்டுமின்றி, ஆன்லைன் மூலம் இங்கிலாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளிலும் விற்பனை செய்துவருகிறேன். 

7 ஆண்டுகளில் 14 தடவை சிலந்திகள் கடித்திருக்கின்றன. அதிக விஷமுள்ள சிலந்தி கடித்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாதுகாப்பாகக் கையாண்டால் சிலந்தி வளர்ப்பு மிகவும் சுவாரசியமானது” என்கிறார் மிங் கு.