Apr 27

அணு ஆயுதப் போருக்கான தளமாக டார்வின் நகர் ; வட கொரியா

வட கொரியா மீதான தாக்குதலொன்றுக்கு தயாராகுவதற்கு அமெரிக்கா அவுஸ்திரேலியாவை பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள வட கொரியா,   அணுஆயுதப் போரொன்றுக்கான தளமாக அவுஸ்திரேலிய டார்வின் நகர்  அமையலாம் என  தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான ரொடோங் சிமுனில்  கடந்த திங்கட்கிழமை விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

வட கொரிய அரசாங்கமானது  தனது நாட்டின்  கொள்கைகளை வெளியிட அந்தப் பத்திரிகையைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய படையினர் மற்றும் அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள  சீனப் படையினருடன்   இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட டார்வின் நகருக்கு  கடந்த வாரம்   1,250  அமெரிக்க கடற்படையினர் விஜயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த அவுஸ்திரேலிய துறைமுக நகரைப் பயன்படுத்தி அமெகரிக்கா வட கொரியாவுடனான அணு ஆயுதப் போரொன்றுக்கு தயாராவதாக  வட கொரிய  பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அதிகளாவான அமெரிக்கப் படையினர்  அனுப்பப்பட்ட சந்தர்ப்பமாக  இது உள்ளதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.