Apr 27

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஏவுகணை

அமெரிக்காவானது தனது சர்ச்சைக்குரிய  'தாட்' ஏவுகணை  பாதுகாப்பு முறைமையை  தென் கொரியாவில் ஸ்தாபிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

வட கொரியாவின் அணுசக்தி அபிலாசைகள் குறித்து பிராந்தியத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவிலிருந்தான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு அந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையை ஸ்தாபிக்கப்படும் இடத்திற்கு அதற்கான உபகரணங்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட சமயத்தில்  உள்ளூரைச்  சேர்ந்த  பெருந்தொகையான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையானது அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை சீர்குலைப்பதாக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது..

 வட கொரியா மேலும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் அணுசக்திப் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில் அமெரிக்காவானது  கடந்த சில நாட்களில் கொரிய தீபகற்ப பிராந்தியத்தில்   தனது நாசகாரி போர் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.

 தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையானது எதிரி நாடுகளால் ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர ஏவுகணைகளை அடையாளம் கண்டு குறுக்கீடு செய்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையை  தென் கொரியாவில் ஸ்தாபிப்பதற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின்  அரசாங்கத்தின் கீழ் கடந்த வருடம் இணக்கம் காணப்பட்டிருந்த போதும், அதனை  இந்த ஆண்டு இறுதி வரை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.