Apr 25

மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்; சாந்தி எம்.பி

தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கு கனடாவில் இருந்து வருகைதந்த வைத்திய கலாநிதி இலம்போதரன் அவர்களினால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் முதன்மை விருந்தினராக  பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராசா  சிறப்பு விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர், கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் சிவஸ்ரீ உருத்திரமூர்த்தி குருக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் வைபவத்தில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராசா உரையாற்றும் போது,

வன்னி மாவட்டத்தில் யுத்தத்தில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

 திட்டமிட்டு இளையோர் பிழையான வழிகளுக்கு செல்வதற்கான முஸ்தீப்புக்களை திரைமறைவில் இனவாதிகள் செயல்படுத்துகின்றார்கள்.

 எமது இளையோரை அவ்பொறியில் இருந்து மீட்டெடுக்க இவ் அறநெறி பாடசாலைகளை அடித்தளமாக கொண்டு அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் சைவநெறி தழைத்தோங்கவும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை இளையோர் செவ்வனவே கடைப்பிடிக்கவும் நல்லொழுக்க சீலர்களாக தலைமை தாங்கும் பண்புள்ளவர்களாக இந்த நாட்டை சமூக, பொருளாதார, இன, ஒற்றுமையை மேம்படுத்தக் கூடியவர்களாக எதிர்காலத்தில்  வளர்த்து எடுக்க வேண்டும் என்றார்.

 கனடா வாழ் உறவான வைத்திய கலாநிதி இலம்போதரன், இப்பயிற்சி நெறிமூலம் மல்லாவி பிரதேச அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு அப்பால் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலை ஆசிரியர்களும் இளையோரின் ஒழுக்கம் தலைமை தாங்கும் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, முதியோரை மதித்தல், சைவசமய ஆசார சீலர்களாக ஆக்குதல் ஆகிய விழுமியங்களுக்கு அப்பால் ஆத்மீக ரீதியாக அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.