Apr 25

ஐ.பி.எல் திருவிழா ; மும்பையைக் கட்டுப்படுத்தியது புனே

ஐ.பி.எல். தொடரின் 28ஆவது போட்டியாக நடைபெற்ற மும்மை மற்றும் புனே அணிகளுக்கிடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது

முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

திரிப்பதி 31 பந்தில் 45 ஓட்டங்களையும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 32 பந்தில் 38 ஓட்டங்களையும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மனோஜ் திவாரி 13 பந்தில் 22ஓட்டங்களையும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

கரண்சர்மா, பும்ரா தலா 2 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், ஜான்சன் தலா ஒவ்வொரு விக்கெட்டும் எடுத்தனர்.

விறுவிப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களையே எடுத்தது. இதனால் புனே அணி 3 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மாவின் அதிரடி பலன் இல்லாமல் போனது. அவர் 39 பந்தில் 58 ஓட்டங்களையும்(6 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 27 பந்தில் 33 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாகீர், கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் தலா ஒவ்வொரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதன்மூலம் மும்பையின் தொடர் வெற்றிக்கு புனே அணி முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 7ஆவது தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை அளித்தது.

பென் ஸ்டோக்ஸ் புனே அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் ரன் எதுவும் கொடுக்காமலேயே தனது ஆரம்ப ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்தார்.

19ஆவது ஓவரில் அவர் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது முக்கிய அம்சமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியை 2ஆவது முறையாக புனே அணி வீழ்த்தியது. இதன்மூலம் புனே அணி 4ஆவது வெற்றியை பெற்றது.