Apr 25

இலைகளைச் சாப்பிடும் மனிதர்

பாகிஸ்தானின் கஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்து வரும் 50 வயது மெஹ்மூத் பட், கடந்த 25 ஆண்டுகளாக இலைகளை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வருகிறார். 

“அளவுக்கு அதிகமான வறுமை எங்கள் குடும்பத்தை வாட்டியது. சாப்பாடு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் பசியை அடக்க முடியாதே? சாலையில் பிச்சை எடுப்பதைவிட இலை தழைகளைச் சாப்பிட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். அதுவே பிறகு பழக்கமாகிவிட்டது. 

பிற்காலத்தில் வேலையும் கிடைத்து, ஓரளவு வருமானமும் வந்தது. ஆனாலும் இலைகளைச் சாப்பிடுவதை என்னால் விட முடியவில்லை. ஒரு நாளைக்கு கழுதை வண்டி மூலம் 600 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இலை தழைகளைச் சாப்பிடுவதால் எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. ஆலமரக் குச்சிகளும் சிசே மரத்தின் இலைகளும் மிகவும் பிடிக்கும்” என்கிறார் மெஹ்மூத் பட்.

இலைகளைச் சாப்பிடுவதாலேயே இந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கிறார் இவர். “போகும் வழியில் பசுமையான இலைகளைப் பார்த்துவிட்டால், உடனே வண்டியை நிறுத்திவிட்டு, நேரம் காலம் பார்க்காமல் இலைகளைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்.

இவர் மருத்துவரிடம் சென்று நாங்கள் பார்த்ததில்லை” என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர் குலாம் முகமது.