Oct 21

அகதிகள் விவகாரத்தை சர்வதேசமயப்படுத்துவது, மாட்டின் முன் வண்டில் கட்டப்படுவதற்கு சமமானது! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

ஐ. நா. மனித உரிமை கட்டமைப்பில் - நடந்தவை, நடப்பவை, நடைபெறவுள்ளவை பற்றி தமிழீழ மக்களிற்கு இன்று நேற்று அல்லா, கடந்த இரு தசாப்தங்களிற்கு மேலாக ஊடகங்கள் மூலமாக எந்த பீதியும் இன்றி தெரியப்படுத்துபவர் என்ற முறையில், கடந்த ஐ.நா.மனித உரிமை சபையின் 36வது கூட்ட தொடரில் நடந்த சில நிகழ்வுகளை தமிழீழ மக்களிற்கு உண்மை யாதார்தத்தின் அடிப்படையில் ஒளிப்பு மறைப்பின்றி எழுதுவது எனது தலையாய கடமையாகும். 

எதிர்ப்பு, சேறுபுசல் என்பதை மிக நீண்ட காலத்திற்கு முன்பே சிறிலங்கா அரசிடமும் அதனது ஊடகங்களிலும் எதிர் கொண்ட காரணத்தினால், எந்த பீதியிமின்றி, யாவற்றை வெளிப்படையாக எழுதிவருகிறேன். மக்கள் மிக தெளிவான பார்வையில் உள்ளதனால் அவர்கள் யாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

மனித உரிமை சம்பந்தமாக, விடயங்கள் தெரிந்து நாட்டிலிருந்து வருபவர்கள் உட்பட தகுதியுடையவர்கள் யாராக இருந்தாலும் - விவாதத்திற்கோ, அலசலிற்கோ மக்களால் ஏற்க கூடிய ஊடகம் ஒன்றில் என்றும் நடத்துவதற்கு தயாராகவுள்ளேன் என்பதை மீண்டும் கூறி தொடர்கிறேன்.

கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா.மனித உரிமை சபையின் 36வது கூட்ட தொடரில் சிறிலங்கா விடயம், அதாவது தமிழீழ மக்கள் மீது சிங்கள அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதபிமானமற்ற செயற்பாடுகள் முக்கிய இடம் பெறாது என்பது முன் கூட்டியே தெரிந்த விடயம்.  ஆனாலும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தனது உரையில், சிறிலங்கா மீது மிகவும் காட்டமான, தாக்கமான   விடயங்களை சுருக்கமாக கூறியிருந்தார். துர்அதிஸ்டவசமாக அவரது சிறிலங்கா பற்றிய உரைக்கு, ஐ.நா.அங்கத்துவ நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறுவதற்கு மேலாக, ஏன் அமைதி காத்தார்கள் என்பதை நாம் ஆராய வேண்டும். 

சிறிலங்கா விடயத்தில், மனித உரிமை சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களது தாக்கம் எவ்வளவு? எப்படியாக யாருடன் இணைந்து வேலை செய்கிறார்கள்? இதில் எத்தனை பேர் தகுதியுள்ளோர் என்ற விடை தெரியாத வினாக்களை, ஐ.நா.விற்கு வெளியில் உள்ள மக்களது ஆர்வங்கள் நியாயமானதே.

உண்மையை வெளிப்படையாக கூறுவதனால் - மனித உரிமை சபை அமர்வு வேளையில் - முகநூல்கள், தகமையற்ற இணைய தளங்களில் வெளியாகும் 90 வீதமான பதிவுகள் உண்மைக்கு புறம்பானதும் மிகைபடுத்தப்பட்வை என்பதை இங்கு நான் எழுதி தான் நீங்கள் அறிய வேண்டுமா? இவை பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் எழுதவுள்ளேன்.

அகதிகளிடம் பணம் சம்பாதிப்பு 

தமிழீழ மக்களது அரசியல் உரிமைகள், இழைக்கப்பட்ட போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதபிமானமற்ற செயற்பாடுகளிற்கு நீதி நியாயம் காணப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இவற்றை நாம் சர்வதேசமயப்படுத்துவதன் மூலம், சிறிலங்க அரசு தவிர்ந்த மற்றைய அரசுகளின் உதவியினாலேயே, அவற்றிற்கு பரிகாரம் காண முடியும்.

ஆனால் “மாட்டின் முன் வண்டிலை கட்டுவது” போன்று, அகதிகள் விவகாரங்களில் பணம் சம்பாதிக்கும் தனி நபர்களை திருப்படுத்தும் நோக்குடன், எமது அரசியல் உரிமைகளை பெற்று கொள்வதற்காக நடைபெறும் போராட்டங்களிற்கு உலை வைப்பது நியாயமற்றது. தமிழீழத்திலிருந்து புலம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரி, மேற்கு நாடுகள் உட்பட மற்றைய ஆபிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள அகதிகளது விடயங்களை, சர்வதேசப்படுத்த முனைவது தமிழீழ மக்களை மேலும் சர்ச்சைக்கு உள்ளாக்கும். 

இவற்றின் விளைவுகள் எப்டியாக இருக்குமெனில், தற்பொழுது தமிழீழ மக்களின் விவகாரங்களில் ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரித்தானியா, கனடா, போன்ற நாடுகளுடன் நாம் மல்லுக்கட்டி, தமிழீழ மக்களிற்கான அவர்களது அற்ப சொற்ப ஆதரவை இழப்பதுடன், மற்றைய நாடுகளின் பகமைகளையும் சம்பதித்து கொள்வோம்.

சிறிலங்காவிற்கு ஆதாரவாக ஆவுஸ்திரேலியா

அன்றும் இன்றும் சிறிலங்காவிற்கு முழு ஆதாரவான நாடா க ஆவுஸ்திரேலியா திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. இதுபற்றி பல கட்டுரைகளை முன்பு எழுதியுள்ளேன். இவ் அடிப்படையில், மனித உரிமை சபைக்கு, ஆவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதரும் நபர்கள், தமிழீழ அகதிகளின் விவகாரங்களை மற்றைய நாடுகள் மீது முன்னெடுப்பார்களெயானால், இவை கபடம் நிறைந்தவையாகவே இருக்கும் என்பதை உணர்ச்சிவச புலம் பெயர் வாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1990ம் தமிழர் மனிதர் உரிமைகள் மையம், பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்ட வேளையில், கபட நோக்கங்களுடன் எம்மிடம் தகவல் திரட்டுதலை மேற்கொண்டு தோல்வி கண்டவர், தனிப்பட்ட காரணங்களிற்காக தூர தேசம் சென்று தமிழ் ஆசிரியராக கடமையாற்றினார். ஆனால் அங்கும் தனது பைகளை நிரப்புவதற்காக, அரசியல் புகழிடம் கோரி சென்றவர்களிடம், தாம் அவர்களிற்களிற்காக வேலை செய்வதுபோல் நடித்து, பைகளை நிரப்புவது ஏற்க முடியாதவொன்று.

நீண்ட கால செயற்பாட்டாளர்களும், சரித்திரம் தெரிந்தவர்களும், தகுதி படைத்தவர்களும், அனுபவசாலிகளும் திட்டமிடப்பட்டு ஒதுக்கப்பட்டு வரும் இவ் வேளையில், பல ஆதாரபூர்வமான நீண்டகால கபடமான செயற்பாடுகளை, புதியவர்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டா?

ஒரு கல்லில் இரு மாங்காய் என்ற ரீதியிலேயே, பல கபட நாடகங்கள்  மனித உரிமை சபையில் மேற்கொள்ளப்படுகிறது. ஊதாரணத்திற்கு, ஆவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு நபர், தொடர்ச்சியாக ஜெனிவா மனித உரிமை சபையில் கலந்து கொள்வதானால், இதற்கு எவ்வளவு பணம் தேவை? இதை யார் கொடுக்கிறார்கள்? இதை எப்படியாக ஓரு குறிப்பிட்ட நபரால் மட்டும் செய்ய முடிகிறது? அவரது பின்ணனி என்ன என்பதை யார் ஆராய்கிறார்கள்? இதை தான் கூறுவார்கள் “நெய் குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையென”.

யாதார்த்தம என்னவெனில், தமிழீழ அகதிகள் சர்ச்சைகள் என்பதும், தமிழீழ செயற்பாட்டாளர் மீதான விடயம் என்பதும், அவர்கள் வாழம் நாடுகளின், உள்நாட்டு சட்டங்களிற்கு அமைய, அங்குள்ள நீதி மன்றங்களில் நீதி காணப்பட வேண்டும். இதை தவிர்த்து அவற்றை சர்வதேசமயப்படுத்துவது மிகவும் திட்டமிடப்பட்ட நாசகார  செயலாகும். 

சுருக்கமாக கூறுவதனால், தமிழீழ மக்களிற்கு இழைக்கப்பட்ட போர்குற்றங்கள், பொறுப்பு கூறல் ஆகியவற்றிற்கு, ஜெனிவா ஐ.நா. மனித உரிமை சபையினால் நீதி காண்பதற்கு முன்னெடுக்கபடும் முயற்சிகளுக்கு உலை வைக்கிறார்கள் என்பதே உண்மை. 

40வது கூட்டத் தொடர்

கடந்த மார்ச் மாதம், சிறிலாங்காவிற்கு இரு வருட கால அவகாசம் கொடுக்கப்பட்டதற்கு ‘முதலை கண்ணீர்’ வடித்தவர்கள் வடிப்பவர்கள், 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 40வது கூட்டத் தொடரில், ஐ.நா.அங்கத்துவ நாடுகள் அமைதி காப்பதற்கான விதையே இங்கு விதைக்கப்படுகிறது.  

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டிற்ககென நிதி வழங்குபவர்கள், தமது பங்களிப்பு, அகதிகளை காண்பித்து பணம் சம்பாதிக்கும் சுயநலவாதிகளுக்கு பயனடையாது பார்த்து கொள்ள வேண்டும். இல்லையேல் இது புலம் பெயர்தேசங்களில், தமிழீழ மக்களது இருப்பையே கேள்வி குறியாக்கும்.

வேறு விதமாக இவற்றை விளக்குவதனால், ‘குடற்புண்’ உள்ள ஒருவருக்கு காய்ச்சல வருவது தவிர்க்க முடியாதவொன்று. இவ் நிலையில் பதிக்கப்பட்டவர், குடற்புண்ணிற்கு வைத்தியம் செய்யாது, தனக்கு ஏற்பட்ட காய்சலிற்கு வைத்தியம் செய்வாரேயானால், அவரது குடற்புண் கடுமையாகி, அவரது இருப்பே கேள்வி குறியாகும். இதே போல், தமிழீழ மக்களிற்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட அகதிகள் விவகாரத்தை சர்வதே மயப்படுத்துவது, இறுதியில் எமது இனத்தின் இருப்பையே கேள்வி குறியாக்கும். 

பதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் 

முன்பு அரசியல் அகதியாக மேற்கு நாட்டிற்கு வந்தவன் என்ற முறையில், அகதிகளிற்கான சகல விதமான கஸ்ட்ட நஸ்டங்களை அறிவேன். ஆனால், இனப்பிரச்சனையை பேசவேண்டியதற்கு பதிலாக, அகதி விடயத்தை முன்னேடுப்பது கபடங்கள் நிறைந்த செயற்பாடு.

அடுத்து, மக்கள் பணத்தில், தாம் பதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளென கூறி ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருபவர்கள், விமானச் சீட்டு வழங்கியவரது முன்னேடுப்பிற்கு மட்டும் குரல் கொடுப்பவராக காணப்படுவரேயானால், இவ் நபர், நிட்சயம் தனது மனசாட்சியை விமானச் சீட்டிற்காக அடைவு வைக்கிறார் என்பதே உண்மை. 

இதேவேளை மாபெரும் இன அழிப்பு போர் குற்றங்கள் நடைபெற்றுள்ள இடத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் பதிக்கப்பட்டவராகவும், சாட்சியாகவும் தன்னை அடையாளப்படுத்தி, தொடர்ச்சியாக ஜெனிவா மனித உரிமை சபைக்கு வருவரெயானால், இதுவும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். 

காரணம், சரளமாக ஆங்கிலத்தில் புலமை கொண்ட சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஆயிரக்காணக்கில் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களில் இருக்கையில், மக்களது பணத்தில் ஏன் குறிப்பிட்டவர் மட்டும் தொடாந்து ஜெனிவா வருகை தர வேண்டும்? இவை விடை காணமுடியாத புதிர்கள்.

வழக்கறிஞர்கள் 

பாதிக்கப்பட்டவர்களது வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வடக்கு கிழக்கிலிருந்து ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகை தருவார்களெயானால், இது வரவேற்கபட வேண்டிய விடயம். எமது அனுபவத்தில் அப்படியான வழங்கறிஞர்கள் - நீதிமன்றங்களில் வழக்கு சுமை காரணமாக, ஒரு சில நாட்கள் மட்டுமே ஐ.நா.மனித உரிமை சபைக்கு வந்து சென்றுள்ளார்கள். ஆனால் அரசியல் லட்சியம் கொண்டு எதிர்காலத்தில் தேர்தல் கழம் இறங்கும் நோக்கம் கொண்டவர்கள், ‘தியாகிகளின்’ பெயரை உச்சரித்து மயாஜாலம் காட்டுவது ஏற்க முடியாதோன்று. சம்பாத்தியமற்ற இவர்களது தொடர்ச்சியான வருகை, சந்தேகத்திற்குரியது! காரணம் ராஜபக்சாவின் அடிவருடியான டக்ளஸ் தேவனந்தவின் ஆட்கள் யாரையும் தற்பொழுது ஜெனிவாவில் வெளிப்படையாக காண முடியாமல் உள்ளது. ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கு’என்பார்கள், 

ஐ.நா. மனித உரிமை சபையின் கட்டமைப்புக்கள், விதிமுறைகளை அறியாதவர்கள், தமது அரசியல் லாபத்திற்காக ஐ.நா. மனித உரிமை சபைக்கு வருகை தருகிறார்கள்.  ஐ.நா. மனித உரிமை சபை முக்கியமற்றதானால், எதற்காக இருபதிற்கு மேற்பட்ட கூட்டங்களை அங்கு நடந்தி, அதில் பங்கு கொள்கிறார்கள்? தமிழர் உரையாற்ற, தமிழர்கள் கேட்பதற்கு ஜெனிவாவில் மனித உரிமை சபைக்கு செல்ல வேண்டுமா?

நடைபெற்று முடிந்த 36வது கூட்டத் தொடரில், சிறிலங்கா விடயத்தில் ஒழுங்காக நடைபெற்ற பக்க கூட்டங்களில் இரண்டே இரண்டு மட்டும் விடயங்கள் அடங்கியதாக காணப்பட்டது. இதில், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் ஒருங்கிணைப்பில், நடாத்தப்பட்ட கூட்டத்தில், சரித்திரத்திலேயே முதற் தடவையாக, ஐ.நா.வில் பதவியில் உள்ள ஒரு முக்கிய புள்ளியான பேரசிரியர் அல்பிரட் சாயஸ் உரையாற்றியிருந்தார். இவர் தமிழீழ மக்களது சுயநிர்ண போராட்டம் நியாயமானது என்பதை ஐ.நா. மண்டபத்தில் கூறியது அங்கு பலரையும் வியக்க வைத்தது. பேரசிரியர் அல்பிரட் சாயஸ் யார், அவர் என்ன பதவியில் உள்ளார் என்பதை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது. இதை தான் ‘கழுதைக்கு விளங்குமா கற்பூர வாசனைய’ என்பார்கள். 

2009ம் ஆண்டு மே மாதம் முதல் புலம்பெயர் வாழ் மக்களிடையே பல பிரிவுகளும் ஒற்றுமையின்மையும் உள்ளது. நாட்டிலிருந்து புலம்பெயர் நாடுகளிற்கு வருகை தரும் சிலர், ஒருபுறம் தமது அரசியல் கட்சிக்கான செயற்பாடு, மறுபுறம் முதலை கண்ணீர், இன்னுமொருபுறம் தமது சுயநலங்களை மனதில் கொண்டு புலம்பெயர் வாழ் மக்களிடையே பிரிவுகள்  மேலும் தொடர்வதற்கான செயல் திட்டங்களை திறம்பட செய்கிறார்கள். “பேய்காட்டப்பட கூடியவர்கள் இருக்கும் வரை, பேய்காட்டுபவர்கள் வருவார்கள், பொய் பறை சாற்றுவார்கள் என்பது முதுமொழி.

முக்கிய குறிப்பு: ஐ.நா.மனித உரிமை சபையின் 33வது கூட்டத் தொடர் வேளையில், அதாவது, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், என் மீது சட்டமற்ற நடவடிக்கை எடுப்பதற்காக, உரிய அனுமதியின்றி, என்னை தேடி வந்த ஐ.நா.கவலாளி, ஐ.நா.விலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு, தற்பொழுது ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தின் தொண்டராக, மனித உரிமை கூட்டத் தொடரில் பங்கு  கொள்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (முற்றும்) 

ச.வி.கிருபாகரன்

பிரான்ஸ்