Apr 25

றூஜ் பார்க் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் தேர்தலில் விஜய் தணிகாசலம் அமோக வெற்றி

சனிக்கிழமை நடைபெற்ற ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ புரோகிறசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி நியமன வேட்பாளர் தேர்தலில் விஜய் தணிகாசலம் அவர்கள் அதிகூடிய பெரும்பான்மையுடன் அமோக வெற்றியடைந்துள்ளார்.

காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நீல்சன் - பிஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஸ்காபரோ கொன்வென்சன் மண்டபத்தில் இத்தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்களின் உரைகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வு, வாக்களிப்பு நிறைவுற்றதுடன் அங்கேயே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் விபரமும் அறிவிக்கப்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், விஜய் தணிகாசலம் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

விஜய் தணிகாசலம் இதில் போட்டியிட்ட மிகவும் இளைய வேட்பாளர். இவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கனடிய இளைய சமூகத்தினர் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். 28 வயது நிரம்பிய கனடிய பட்டதாரியான இவர், கனடிய முன்னணி வங்கி ஒன்றில் நிதித்துறையில் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதிலிருந்தே கனடிய சூழலில் கல்வி கற்று வளர்ந்து வரும் இவர், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் சிறந்த ஆளுமை பெற்றவர். இது தவிர, கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக, பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதிலிருந்தே இளையோர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வருவதுடன், தாயக உறவுகள் எதிர்கொள்ளும் பல இன்னல்களைத் தீர்த்து வைக்கும் பல சேவைகளிலும் தன்னை முழு அர்பணிப்புடன் ஈடுபடுத்தி வருபவர்.

எனவே இவரின் இவ்வெற்றி, இத்தொகுதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆத்துடன், ஆட்சி மாற்றம் தொடர்பாக ஒன்ராறியோ மாநிலத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஒரு கருத்தியல் மாற்றம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், விஜய் தணிகாசலம் பெற்றுள்ள இவ்வெற்றியானது 2018ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் என நம்பப்படும் புரோகிறசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி வட்டாரத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த இந்த பி.சி. கட்சியின் தேர்தலில், திரு. சாமி அப்பாத்துரை அவர்களும், திரு. சீயான் சின்னராஜா அவர்களும் இவரை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தனர்.