Oct 20

அரசியல் சீர்திருத்தங்கள் ஒரு குர்டிஸ்தான் அல்லது கற்ரலோனியா பாணியில் ஒரு தனி நாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வழிசெய்யும்! - நக்கீரன்

கடந்த செப்தெம்பர் 21, 2017 அன்று பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி  அரசியல் யாப்பு  வழிநடத்தல்  குழுவினால் தயாரிக்கப்பட்ட  இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு பேரவையில் தாக்கல் செய்தார். அரசியல் யாப்பு செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட 6 உபகுழுக்களின் அறிக்கைகள்,  மக்கள் கருத்தறிய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் இடைக்கால அறிக்கை பற்றிய விவாதம் தொடர்கிறது. இடைக்கால அறிக்கையை சிங்கள - பவுத்த தேசியவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த இடைக்கால அறிக்கை இணைப்பாட்சிக்கு அடித்தளம் இடுகிறது என சிங்கள - பவுத்த தேசியவாதிகள்  பரப்புரை செய்கிறார்கள். இவர்களது பிதாமகன் என்று சொல்லக் கூடிய குணதாச அமரசேகரா என்பவர் 'The present Constitution – Is it Federal or not?' (இப்போதுள்ள அரசியல் யாப்பு இணைப்பாட்சியா அல்லது இல்லையா,") எனக் கடாவி டெயிலி மிறர் நாளேட்டில்  ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 

அதில் "அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் 13 ஏ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கான மாகாண சபை சட்ட வரைவு ஒக்தோபர் 09, 1987 அன்று தாக்கல் செய்யப்பட்டது.  அதன் பின்னர் சனாதிபதி அரசியல் யாப்பு உறுப்புரை  120 மற்றும் 121 க்கு இணங்க  அந்தச் சட்ட திருத்தம்  உறுப்புரை  83 இன் கீழ் பொதுமக்களது வாக்கெடுப்புக்கு விட்டு மக்களது அங்கீகாரம் பெற வேண்டுமா  இல்லையா என்பதை அறியத்தருமாறு உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. இதனைத் தலைமை நீதியரசர் உட்பட 11 பேர் கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மாகாண சபை சட்ட திருத்தம் அரசியல் யாப்பை மீறவில்லை என தலைமை நீதியரசர் உட்பட 6 நீதியரசர்களும் அரசியல் யாப்பைப் பலமுறை மீறுவதாக எஞ்சிய 5 நீதியரசர்களும் தீர்ப்பளித்தார்கள்.  எதிராக தீர்ப்பளித்த நீதியரசர் ஆர்.எஸ். வனசுந்தர (இவர் ஒரு தீவிர சிங்கள - பவுத்த தேசியவாதி எனக் கருதப்பட்டவர்) உட்பட  5 நீதிபதிகளுகம்  தங்கள  தீர்ப்பில் பின்வருமாறு  கூறியிருந்தார்கள்.

"13ஏ மாகாண சபை  சட்ட திருத்தம் குறைந்த பட்சம் ஒரு அரைவாசி இணைப்பாட்சிக் கட்டமைப்புக்கு (a quasi federal structure)  அடித்தளம்  இடுகிறது.  இராஜீவ் காந்தி அவர்களே இந்தச் சட்ட திருத்தம் இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கு  இந்திய அரசியல் யாப்பு வழங்கியிருக்கும்   அதிகாரங்களுக்கு மேலாக இருக்கின்றதென சென்னை மரீனா கடற்கரையில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில்    தமிழர்களைப் பார்த்துச் சொன்னார். இந்திய அரசியல் யாப்பு மத்திய அரசுக்கு பல அதிகாரங்களை வழங்கினாலும் அதன் வடிவம் ஒரு இணைப்பாட்சிதான்.  இந்தியாவினால் 13ஏ அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு  கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடருகிறது.  பிரபாகரன் மரணித்து  இரண்டு நாள் கழியும் முன்னர்  இந்திய உயர் அதிகாரிகள் எங்களது வாசலுக்கு வந்து 13 ஏ சட்ட திருத்தம்   நடைமுறைப் படுத்த வேண்டியது தங்களது கடமை என  நினைவு படுத்தினார்கள்.  அவர்கள் இலங்கை வருகிற ஒவ்வொரு முறையும்  எங்களது அதிகாரிகள் புது டில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் போதும் 13ஏ ++ யை நடைமுறைப்படுத்துமாறு  நினைவு படுத்தினார்கள். 

13 ஏ சட்ட திருத்தம்   குறைந்தபட்சம்  அரை இணைப்பாட்சிக்   கட்டமைப்புக்கு அடித்தளத்தை  இட்டுவிட்டது. வெகுவிரைவில் பிரிவினை நடந்தேறும்.  இப்போதுள்ள கட்டுமானம் இந்தியாவும் தமிழர்களும் இந்த நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்து  அதனைத் துண்டாடப் போதுமானது. இந்தியாவை விட்டுவிடுவோம். எமது நாட்டின் எதிர்க்கட்சி பதவியில் இருந்திருந்தால் இந்த மட்டில் ஈழம்  வந்திருக்கும். எனவே, இப்போதுள்ள அளுத்தமான அதே சமயம் மிகவும் அவசரமான கடமை என்னவெனில் இந்தச் சட்டங்களை அரசியல் யாப்பில் இருந்து அகற்ற வேண்டும்" என குணதாச அமரசேகரா கேட்டுள்ளார்.

இப்படி ஒருபுறம் சிங்கள -  பவுத்த தேசியவாதிகள் போர்க் கொடி தூக்கினாலும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை வரவேற்று எழுதும் சிங்கள   ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். அது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. 

மறுபுறம் இந்த  இடைக்கால அறிக்கையில், சமஷ்டி இல்லை, வட - கிழக்கு மாகாணங்களின் இணைப்பில்லை, ஒன்றுமே இல்லை  எனச்  சிவசக்தி ஆனந்தன்   கூப்பாடு போடுகிறார். அவர் எப்போதும் அப்படித்தான்.  அவரைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர் 191 பக்கம் கொண்ட இந்த இடைக்கால அறிக்கை முழுவதையும்  கவனமாகப் படித்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

சிவசக்தி ஆனந்தன் இப்படி என்றால் அவருக்குப்  பொன்னம்பலம் குடும்பத்தின்  சொத்தான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (இதன் தாபகர் திருவாளர் ஜிஜி பொன்னம்பலம் ஒற்றையாட்சிக்கு ஆதரவாக தீவிர பரப்புரை செய்தவர்) கட்சியின் இன்றைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வழிகாட்டுக் குழுவின் அறிக்கையில் சமஷ்டி இல்லை, வட - கிழக்கு மாகாணங்களின் இணைப்பில்லை, ஒன்றுமே இல்லை  என்று வழக்கம் போல் வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைக்கிறார்.

ஒக்தோபர் 01, 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உட்பட 27 நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் (30/1) பற்றியும் "இதில் ஒன்றுமே இல்லை. தமிழ்ச் சொல் இல்லை, வட - கிழக்கு இணைப்பில்லை" எனப் பேசினார். அதோடு  நின்று விடாமல் தீர்மானத்தின் படியை ஜெனிவா நாட்டின் வீதிகளில் போட்டு அவரும் அவரது பரிவாரமும் எரித்தார்கள்.    அமெரிக்க நாட்டுத் தூதுவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. "நீங்களும் (தமிழர்கள்) எதிர்க்கிறீர்கள்,  சிங்களவர்களும்  எதிர்க்கிறார்கள்.  அப்படியென்றால் நாம் ஏன் இதில் தலையிட வேண்டும்" என எம்மைப் பார்த்துக் கேட்டார்கள்.

இடைக்கால அறிக்கையில் ஒன்றுமே இல்லை என்று முகாரி பாடுபவர்கள் அண்மையில் இடைக்கால அறிக்கை பற்றி  முன்னாள் சனாதிபதி மகிந்தா இராஜபக்சா 16 ஒக்தோபர், 2017 அன்று விடுத்துள்ள நீண்ட ஊடக அறிக்கைப் படிக்க வேண்டும்.  அந்த அறிக்கையில்  புதிய அரசியல் யாப்பை 'அழிவை விளைவிக்கும்' (destructive) முன்மொழிதல்கள்  என வருணித்துள்ளார்.  தாங்கள் அதனை  முற்றிலும் எதிர்ப்பதாகவும்  அரசு அதனைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். புதிய அரசியல் யாப்பை  எழுத நல்லாட்சி அரசு  பல முன்மொழிதல்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.  ஆனால் நல்லாட்சி அரசு தேர்தலின் போது  பழைய யாப்பை நீக்கிவிட்டு  ஒரு புதிய யாப்பை எழுத மக்களிடம் ஒருபோதும்  ஆணை கேட்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறையை ஒழிப்பது, தேர்தல் முறையை மாற்றுவது என்ற இந்த இரண்டுக்குமே நல்லாட்சி அரசு மக்களிடம் ஆணை கேட்டிருந்தது.  இப்படியான சொற்புரட்டை செய்யத் திட்டமிடுவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை என்ன பாடுபட்டும்  நிறைவேற்றத் துடிக்கும்  இவர்களது மனப்பான்மையைச் சுட்டிக் காட்டுகிறது. 

இந்தச் சீர்திருத்தத்துக்குப் பின்னால் இருக்கிற  அவர்களது நோக்கம் தெளிவானது. முன்மொழிதலின் நான்காவது பக்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரே மாகாணமாகக் கருதப்பட வேண்டும் எனச் சொல்கிறது.  மேலும் இப்போது இலங்கை 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முன்மொழிதல்களில்  மாவட்டங்கள் எத்தனை என்பது  வரையரை செய்யப்படவில்லை. இது அவர்களது உண்மையான நோக்கத்தை சுட்டிக் காட்டுகிறது.

அரசு முன்வைத்த முன்மொழிதலில் 'ஏகிய' என்ற   சொல் சிங்களப் பதிப்பில் உள்ளது. ஆனால் ஆங்கிலப் பதிப்பில் 'ஒற்றையாட்சி'  (unitary’) என்ற சொல்  கைவிடப்பட்டுள்ளது.  நாட்டு மக்கள் சிறிலங்கா தொடர்ந்து ஒற்றையாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடு  என்று நினைப்பார்கள் ஆனால் அனைத்துலக சமூகத்தைப் பொறுத்தளவில் அது சிறிலங்கா ஒற்றையாட்சியை கைவிட்டு விட்டதாக நினைக்கும்.

துணைநிறுவனங்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற  கோட்பாட்டின்  கீழ் மாகாணங்கள்   தங்களது  நிருவாகத்தைச் செவ்வனே செய்வதற்கு எல்லா அதிகாரங்களும் பரவலாக்கப்படும் என முன்மொழியப் பட்டுள்ளது. இது போன்ற சட்ட அடிப்படையி்லும் தத்துவ  கட்டமைப்பிலும் ( conceptual framework) தான் பிரிவினைாதிகள் வடக்கும்  கிழக்கும் இணைந்த பிரதேசத்தில் ஒரு சுதந்திர அரசை நிறுவ 1972  முதல் போராடினார்கள்.

இடைக்கால அறிக்கையில் பல ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் கடைசியில் அவை கைவிடப்படலாம். எடுத்துக்காட்டாக பவுத்த மதத்திற்கு முதன்மை இடம், தமிழில் தேசிய கீதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் முன்மொழியப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டால்  சட்ட அடிப்படையி்லும் தத்துவக்  கட்டமைப்பிலும்  இலங்கையில் ஒரு குர்டிஸ்தான் அல்லது கற்ரலோனியா  பாணியில ஒரு தனி நாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வழிசெய்யும்.

மாகாணங்களுக்கு ஒருமுறை சட்ட அடிப்படையி்லும் தத்துவ  கட்டமைப்பிலும்  அதிகாரம் பரவலாக்கப்பட்டால், நாடாளுமனறம் அதனைத் திருப்பிப் (மூன்றில் இரண்டு பெரும்பான்மை யோடும்) பெற முடியாது. அப்படி மாற்றங்கள் செய்வதாக இருந்தால் ஒவ்வொரு மாகாண சபையும் அதற்கு  இசைவு தெரிவிக்க வேண்டும்.  தேசிய அளவுகோல்கள் மற்றும் தேசியக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றால் மேல்சபையின் இசைவு வேண்டும். இது மாகாண சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்கும்.

மேலும்  மத்திய அரசுக்குப் பொதுப்பட்டியலில் காணப்படும் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டு  அந்த அதிகாரங்கள்  மாகாண சபைகளுக்கு கையளிக்கப்படும். இதன் பின்னர்  மத்திய அரசின் அதிகாரங்கள் ஒரு இணைப்பாட்சி முறை அரசுக்குப்  பொருந்துவதாக  இருக்கும்.

மாகாண  ஆளுநர்களின்  நிறைவேற்று அதிகாரங்கள் மாகாண  அமைச்சர் வாரியங்களுக்கு  மாற்றப்படும்.  ஆளுநர்கள் தங்களது கடமைகளை மாகாண அமைச்சர் வாரியத்தின் ஆலோசனைப்படி செய்வார்கள்.

தற்போதைய அரசியல் யாப்பின் கீழும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும்   காணி சம்பந்தமாக  மத்திய அரசுக்கு  இருக்கும் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.  அதன் பின் மத்திய அரசு மாகாண  சபைக்குரிய காணியைத்  தனது தேவைக்குக் கேட்டுப் பெறவேண்டும்.  அது (மாகாணசபையால்) மறுக்கப்பட்டால்  அது முதலில் தீர்ப்பாயத்துக்கு விடப்படும். அதன்பின் உருவாக்க இருக்கும் அரசியல் யாப்பு  நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விடப்படும்.  இதற்கு முற்றிலும் மாறாக இந்திய அரசியல் யாப்பின்  கீழ்  மத்திய அரசுக்குத் தேவைப்படும் காணியை மாநில அரசுகளின் இசைவு இருக்கிறதா,   இல்லையா எனப் பாராது காணியை மத்திய அரசு கையகப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. 

அரசு முன்வைத்த முன்மொழிதலில் 'ஏகிய' என்ற   சொல் சிங்களப் பதிப்பில் உள்ளது. ஆனால் ஆங்கிலப் பதிப்பில் 'ஒற்றையாட்சி'  (unitary’) என்ற சொல்  கைவிடப்பட்டுள்ளது.  நாட்டு மக்கள் சிறிலங்கா தொடர்ந்து ஒற்றையாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடு  என்று நினைப்பார்கள் ஆனால் அனைத்துலக சமூகத்தைப் பொறுத்தளவில் அது சிறிலங்கா ஒற்றையாட்சியை கைவிட்டு விட்டதாக நினைக்கும்.

எனவே இன அல்லது மத அடிப்படையில்  இணைப்பாட்சி அலகுகளைச் செதுக்கி அதற்குப் பாரியளவு அதிகாரங்களை வழங்குவது இந்த நாட்டில் நடைபெறக் கூடாது. இந்த அரசுக்கு விடுக்கும்  எனது வேண்டுகோள் என்னவென்றால் புதிய அரசியல் யாப்புக்கான அழிவு முன்மொழிவுகளை அது கைவிட வேண்டும்.

ஒரே இடைக்கால அறிக்கை ஆனால் அவரவர் விரும்பியபடி  வெவ்வேறு வியாக்கியானங்கள்  கொடுக்கப்படுகின்றன.  சிங்களத்தரப்பு ஒருவிதமாகவும் தமிழர் தரப்பு அதற்கு நேர் எதிராகவும்  இந்த இடைக்கால அறிக்கையை விமர்ச்சிக்கின்றன.   'இல்லை' புராணம் பாடும் குமாரவடிவேல் குருபரன்   போன்ற  தமிழ் அரசியல்வாதிகள், நிலாந்தன் போன்ற பந்தி எழுத்தாளர்கள்   இடைக்கால அறிக்கையில் ஒன்றும் இல்லை,  தமிழ்மக்கள் மறுபடியும் ஏமாற்றப்படப் போகிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுகிறார்கள்.

சிங்கள - பவுத்த தேசியவாதியான மகிந்த இராஜபக்சா  இந்த இடைக்கால அறிக்கையில் இணைப்பாட்சிக்குரிய அம்சங்கள் நிறைய இருக்கிறதாகச் சொல்கிறார்.  அவர் இப்போதுள்ள 13ஏ சட்ட திருத்தத்திற்கு மேலே  போக மறுக்கிறார்.  போர் முடிந்த கையோடு  பன்னாட்டுத்  தலைவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம்  பான் கி மூன் அவர்களுக்கும் 13ஏ ++  கொடுக்கப் போவதாகவும் பொது வெளியில் கொடுத்த வாக்குறுதியை இப்போது மறந்துவிட்டார்.

ஒரு நவீன, முன்னேற்றகரமான,  முற்போக்கான, நியாமான, நீதியான அரசியல் யாப்பை உருவாக்கி அதன் வழியாக இந்த நாட்டில் வாழும்  மூவின மக்களையும் ஒன்றிணைத்து - நல்லிணக்கத்தை உருவாக்கினால்  நாடு நலம்பெறும். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு நாடு செழிக்கும்.  ஆனால் இவற்றுக்கு  முன்னாள சனாதிபதி   மகிந்த இராஜபக்சா முட்டுக்கட்டை போகிகிறார்.  முக்கிய தடைக் கல்லாக இருக்கிறார்.   இனவாத அரசியலே அதிகாரத்தைப் பிடிக்கச் சுலபமான  வழி என அவர் நினைக்கிறார்.

2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில்  தோல்வி அடைந்த  முன்னாள் சனாதிபதி  மகிந்த இராஜபக்சா புதிதாக  எந்தப் பாடத்தையும் படிக்கவும் இல்லை. எதையும் மறக்கவும் இல்லை. மகிந்த இராஜபக்சா தொடர்ந்து அடுத்த தேர்தலைப் பற்றித்தான் கவலைப் படுகிறார். அடுத்த சந்ததிபற்றிய கவலை அவருக்கு இல்லை. இது பெரிய சோகம்.