Mar 04

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: நாகை கடற்பகுதியில் பதற்றம்

தமிழகத்தின் நாகையிலிருந்து ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 8 பேர், இலங்கைக் கடற்படையினரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். தமிழகத் தகவல்கள் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் நாகை கடற்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள.

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த சி. சந்தோஷ் (30), ஆறுமுகம் (32), விஷ்வா (40), ச. சந்தோஷ்(30), சதன் (25), சரத் (35), பாலு (45), சிங்காரம் (30) ஆகிய 8 பேரும் நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 1-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு (மார்ச் 3) கோடியக்கரைக்குத் தென்கிழக்குக் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து, மீன்பிடி படகுடன் சிறைபிடித்து, திரிகோணமலை கடற்படை முகாமுக்குக் கொண்டுச் சென்றனர்.

இதனிடையே, இலங்கை மீனவர்களின் சிறைபிடிப்பு நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த நாகை மீனவர் சி. சந்தோஷ், படகிலிருந்த பாட்டிலை உடைத்து விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை, இலங்கைக் கடற்படையினர் திரிகோணமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

கடந்த 3 நாள்களில் இலங்கைக் கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் தமிழக மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. இலங்கைக் கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள், நாகை மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.